பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடுவில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மாநிலம். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


மத்தியப் பிரதேச அரசியல்:


ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.


இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த ஒரே ஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.


இச்சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியுடன் முடிவடைகிறது. எனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில தேர்தலுடன் மத்தியப் பிரதேசத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமைச்சரவை விரிவாக்கம் செய்த பாஜக:


கர்நாடகாவில் அடைந்த தோல்வியை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.


இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர சுக்லா, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கவுரிசங்கர் பிசென், முதல் முறை எம்எல்ஏவும், முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சருமான உமாபாரதியின் மருமகன் ராகுல் லோதி ஆகிய மூவர் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம், அமைச்சர்களின் எண்ணிக்கை 31லிருந்து 34ஆக அதிகரித்துள்ளது.


சாதிய அளவிலும் பிராந்திய அளவிலும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான், ஆளுநர் மங்குபாய் படேல் ஆகியோர் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என தகவல் வெளியான வண்ணம் இருந்தது.


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர சுக்லா, பிராமண சமூகத்தை சேர்ந்தவர். விந்தியா பகுதியில் உள்ள ரேவாவில் இருந்து நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 71 வயதான கௌரிசங்கர் பிசென், மத்தியப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராகவும் மகாகோஷல் பகுதியில் உள்ள பாலகாட்டில் இருந்து ஏழு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். 46 வயதான ராகுல் லோதி, பந்தேல்கண்ட் பிராந்தியத்தின் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள கர்காபூரில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.