தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக தெலங்கானா உள்ளது. அந்த மாநிலம் உதயமானது முதல் அங்கு சந்திரசேகர் ராவின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.


தெலங்கானா தேர்தல்:


அங்கு ஆட்சியை தக்கவைக்க சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதியும், ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் போட்டியிட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115  தொகுதிகளுக்கு  மட்டும் வேட்பாளர்களை அறிவித்தார். நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


அந்த நான்கு தொகுதிகளில் நர்சாபூர் தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தற்போது மதன் ரெட்டி உள்ளார். ஆனால், இந்த தொகுதி தனக்கு ஒதுக்குமாறு சுனிதா லக்‌ஷ்மரெட்டி கோரிக்கை விடுத்து வருகிறார். இதுதொடர்பாக, அவர் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை நேரில் சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்.


அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.


இதனால், தனக்கு நர்சாபூர் தொகுதி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்திற்கு எம்.எல்.ஏ. மதன்ரெட்டி ஆளாகியுள்ளார். இதன் காரணமாக, அந்த மண்டலத்தில் பி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய தலைவரும், அமைச்சருமான ஹரிஷ்ராவின்  அலுவலகத்தை தன்னுடைய நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. மதன்ரெட்டி கடந்த நேற்று முன்தினம் முற்றுகையிட்டார்.


முதலமைச்சருடன் நெருக்கமானவரும், அந்த மாநில சுகாதாரத்துறை மற்றும் நிதியமைச்சருமான ஹரிஷ்ராவ் அலுவலகத்தை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முற்றுகையிட்டதுடன் எம்.எல்.ஏ. தனது கோரிக்கையை தனது ஆதரவாளர்கள் முன்பு வெளிப்படையாக கூறினார்.


எம்.எல்.ஏ. சீட்டுக்கு மோதல்:


மதன்ரெட்டிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி வரும் அதே நிலையில், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் கட்சியை விட்டு விலகப்போவதாக மதன்ரெட்டி எச்சரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.


மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 115 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலும் சிலருக்கு அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பி.ஆர்.எஸ். கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


நரஸ்பூர் தொகுதியை தனக்கு கேட்கும் சுனிதா காங்கிரஸ் கட்சி சார்பில் 1999 முதல் 2009ம் ஆண்டு வரை அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2019ம் ஆண்டு அவர் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தார்.