நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 


விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இந்தியா:


இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று, மகத்தான சாதனை படைத்துள்ள இந்தியா, அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது.


ஏற்கனவே, ககன்யான் திட்டத்தின் மூலம் 400 கி.மீ. சுற்றுப்பாதைக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருகிறது. மூன்று நாள்கள் பயண திட்டம் முடிந்தவுடன், அவர்களை பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 


இந்த நிலையில், ககன்யான் விண்கலத்தில் "வியோமித்ரா" என்ற பெண் ரோபோவை இந்தியா அனுப்ப உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், "அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஒரு சோதனை விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும். 


உலக நாடுகளை மிரள வைக்கும் இந்தியாவின் அடுத்த திட்டம்:


அடுத்ததாக , "வியோமித்ரா" என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்புவோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. இப்போது அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பணியைத் திட்டமிடுகிறோம். விண்வெளி வீரர்களை அனுப்புவது போலவே அவர்களை திரும்ப அழைத்து வருவதும் மிக முக்கியம்.


இரண்டாவது பயண திட்டத்தில், ஒரு பெண் ரோபோவை அனுப்புவோம். மனிதர் போலவே அனைத்து செயல்பாடுகளையும் அந்த ரோபோ  செய்யும். எல்லாம் சரியாக நடந்தால், நாம் முன்னேறலாம்" என்றார்.


சந்திரயான் 3 வெற்றி குறித்து பேசிய அவர், "இஸ்ரோ குழுவுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் பதற்றமாக இருந்தோம். எனது முதல் பதட்டமான தருணம், சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து சந்திரனின் சுற்றுப்பாதைக்கு சென்றபோதுதான் ஏற்பட்டது. லேண்டர் தரையிறக்கம் மிகவும் சீராக இருந்தது. சந்திரனில் தரையிறங்குவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் நாட்டின் பயணத்தில் பெரிய முன்னேற்றம்.


விண்வெளி துறையின் கதவுகளைபிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததால் இது நடந்தது. 2019ஆம் ஆண்டு வரை, ஸ்ரீஹரிகோட்டாவின் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால், இந்த முறை ஊடகங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டனர். இது மக்களுக்குச் சொந்தமானது" என்றார்.