புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வருகின்ற திங்கள்கிழமைக்குள் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் மன்னிப்பு கேட்பதாக பிரசாந்த் உம்ராவ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் வதந்தி வீடியோ
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தது. இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பதட்டமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு, பீகார் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தன. தொடர்ந்து, தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டது. அதன்படி, வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, விசாரணையின் அடிப்படையில் கைதும் நடந்தது.
பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு:
இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரவியது, இதை பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளார் பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவரை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம் -மனு
அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குகள் () ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிவாரணத்தைக் கோரலாம் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மித் சிங் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்தான், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிரசாந்த் உம்ரா தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரித்தது. அப்போது, 15 நாட்களுக்கு காவல்துறையில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மாற்றியமைத்தது. அதில், “மனுதாரர் 15 நாட்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவர் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும், அதன்பின் விசாரணை அதிகாரி தேவைப்படும்போது அவர் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.