கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.


சி.டி.ரவி தோல்வி:


தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.டி. ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சிக்கமகளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1978-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். 2004-ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக சிக்மகளூரு தொகுதி இருந்தது. அதன் பின் நிலைமை மாறிவிட்டது.


2004-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜகவின் சி.டி ரவி இங்கு வெற்றி பெற்று வருகிறார். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  சிக்மகளூர் சட்டமன்றத் தேர்தலில்  சி.டி.ரவி 26,314 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சங்கர் பி.எல்-ஐ தோற்கடித்து வென்றார்.


சிக்மகளூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் திம்மாஷெட்டி மற்றும் காங்கிரஸின் எச்.டி.தம்மையாவை எதிர்த்துப் போட்டியிட்டார் சி.டி.ரவி. காங்கிரஸ் வேட்பாளரான தம்மையா, சி.டி.ரவிக்கு உதவியாளராக பணியாற்றியவர். சி.டி.ரவியின் உதவியாளராக இருந்த தம்மையாவையே அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் 3.40 மணி நிலவரப்படி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தம்மையா 85,054 வாக்குகள் பெற்று வெற்றியடைந்த நிலையில், பாஜக வேட்பாளர் சி.டி.ரவி 79,128 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 


பாஜகவிற்கு தக்க பதிலடி-ராகுல்


கர்நாடகா தேர்தல் வெற்றியை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முதலில் கர்நாடக மாநிலத்தில் பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதலாளிகளுக்கு வேலை செய்யும் பா.ஜ.க விற்கு கர்நாடகா மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலை அனைத்து மாநிலங்களில் தொடரும். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும்” என தெரிவித்தார்.


அதேபோல அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது பொதுமக்களின் வெற்றி. மோசமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எங்களின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக வேலை பார்த்துள்ளனர். மக்கள் எங்களின் வாக்குறுதிகளுக்காக வாக்கு அளித்துள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை இன்று மாலை பெங்களூரு வருமாறு கூறியுள்ளோம். இதனை அடுத்து நடக்க உள்ள கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிக்கப்படும் என்றார்.