குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு வணக்கம் சொல்லும்போது, பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் கேமராவை பார்ப்பது போன்ற காட்சி உண்மையில்லை என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
பிரிவு உபச்சார விழா:
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கானத் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் இன்றோடு முடிவுபெறுவதையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையநாயுடு, சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வணக்கம் சொன்ன பிரதமர்:
அப்போது விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தபோது அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அனைவருக்கும் அவருக்கு வணக்கம் சொல்ல ராம்நாத் கோவிந்தும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடியே வந்தார். பிரதமர் மோடியும் வணக்கம் சொல்ல, குடியரசுத் தலைவரும் வணக்கம் சொன்னார். வணக்கம் சொன்னதும் கையை பிரதமர் மோடி இறக்கிவிட்டு கேமராவை பார்த்தபடி நிற்க, ராம்நாத் கோவிந்த் மட்டும் வணக்கம் கூறியபடி வந்தார்.
தவறாக விமர்சனம்:
இந்த காட்சியில், பிரதமர் கையை இறக்கியபின் எடுக்கப்பட்ட காட்சிகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர். குடியரசுத் தலைவர் வணக்கம் சொல்லும் போது பிரதமர் மோடி வணக்கம் சொல்லாமல் கேமராவிற்கு போஸ்கொடுத்துக் கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தனர்.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பேராசிரியர் அசோக் ஸ்வைன், “இந்தியாவின் பிரதமர் நாட்டின் தலித் குடியரசுத்தலைவரை புறக்கணித்து கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்” என்று கூறினார்.
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் எம்பி கார்த்தி சிதம்பரம், “எதையும் சொல்லாமல் பதிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் சிங், “இது ஒரு அவமானம். மன்னித்துவிடுங்கள் சார். இந்த மக்கள் இப்படி தான். உங்களது பதவி காலம் முடிந்துவிட்டது, இப்போது இவர்கள் உங்களைப் பார்க்க கூட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
பாஜகவினர் பதிலடி:
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜகவினர் இந்த காட்சிக்கு முந்தைய, அதாவது பிரதமர் வணக்கம் சொல்லும்போது குடியரசுத் தலைவரும் வணக்கம் சொல்லும் காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதுதான் முழு வீடியோ என்றும் கட் செய்த வீடியோவை பதிவிட்டு காங்கிரஸ் ஆதாயம் தேடுவதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளதையடுத்து, தனது பதவி காலத்தின் கடைசி நாளான இன்று, ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு இன்று உரையாற்றுகிறார்.