அமராவதியைச் சேர்ந்த மருந்தாளரான உமேஷ் கோல்ஹே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு புதிய குற்றவாளிகளும் கொலையைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற பிரியாணி விருந்தில் கலந்துகொண்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


புதன்கிழமை அமராவதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான மௌலவி முஷ்பிக் அகமது (41) மற்றும் அப்துல் அர்பாஸ் (23) ஆகியோரை காவலில் வைக்க கோரும் போது என்ஐஏ இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறப்பு நீதிபதி ஏ.கே. லஹோடி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை ஆகஸ்ட் 12 வரை என்ஐஏ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்தைச் செய்த பிற குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க இருவரும் உதவியதாக தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்தது.


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இருவரின் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்குப் பிறகு ஒரு பிரியாணி விருந்து நடத்தப்பட்டது. அதில், முஷ்பீக் மற்றும் அப்துல் ஆகியோர் கலந்து கொண்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.


கொலை செய்த பின், அதில் மூளையாக செயல்பட்ட ஷேக் இர்பானை பல முறை தொடர்பு கொண்டு முஷ்பிக் பேசியுள்ளார். இர்பான் நடத்தும் நிறுவனத்தில் அப்துல் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இர்பான், ரஹ்பர் ஹெல்ப்லைன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.


காவலில் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் காஷிப் கான், அவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொருந்தாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இருவரையும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைக்க உத்தரவிட்டது.


ஜூன் 21 அன்று கிழக்கு மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் கோல்ஹே கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவை ஆதரித்து கோல்ஹே சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண