அன்றாடம் இணையத்தில் ஏதாவது சில வீடியோக்கள் வைரலாகி ட்ரெண்டாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு பெரிய மரம் தூரோடு வெட்டி சாய்க்கப்பட அதில் தஞ்சமடைந்திருந்த பறவைகள் பதறி ஓடும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவைக் காணும் போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.



அத்தனை பெரிய மரத்தை மனிதன் கண்டுபிடித்த இயந்திரம் நொடிகளில் வெட்டி சாய்க்கிறது. மனிதன் மனிதமற்றுப் போனான் என்பதற்கு வேறு சாட்சி இருக்க முடியாது என்பதற்கு அந்த வீடியோ ஒரு சாட்சியாக இருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலின் வரி ஒலிப்பது மனதை இன்னும் பிசைவதாக உள்ளது.


இந்த வீடியோவை சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஸ்பேரோ பாண்டியராஜன் பகிர்ந்துள்ளார்.


மரங்கள் ஏன் அவசியம்?


உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து எல்லாம் அளித்து வருவது காடுகள்தான். ஆனால் நாம் மரங்களை சற்றும் மதிக்காமல் வெட்டி வீசுகிறோம். இந்த பூமியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சரியான மரங்களை தகுந்த இடங்களில் நட வேண்டும்.


மரம் ஏன் வளர்க்க வேண்டும், மரம் வளர்ப்பை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கு நம் உலகில் நிறைய முன்மாதிரி மக்கள் இருக்கின்றனர்.


வாங்கரி மாத்தாய் தெரியுமா உங்களுக்கு?


வாங்கரி மாத்தாய் கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். இவர், 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு  அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக் காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.




 


இது தான் இவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. 1977ல் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (ஜூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியைத் தொடங்கினார். பின்னர் பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார். ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும். 30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார். இவற்றோடு மக்கள் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச் சத்து, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது. 


நைரோபியில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 


மரங்களின் தாய் திம்மக்கா:


கென்யாவின் வாங்காரி மாத்தாயை அறிந்த நாம், நம்மூரின் மரங்களின் தாய் என்று போற்றப்படும் திம்மக்காவை அறிந்துகொள்ள வேண்டும். கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை நடவு செய்தவர் ராம்நகர் மாவட்டம் குளிகல் கிராமத்தை சேர்ந்த சாலுமரத திம்மக்கா. குளிகல் குதூர் இடையேயான சாலையில் வரிசையாக ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்த்ததால் அவர் சாலுமரத திம்மக்கா என்று கன்னட மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். இந்தியாவின் சிறந்த தேசிய குடிமகள் விருதினை ஏற்கனவே பெற்ற இவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கர்நாடகாவில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது.




இவர்கள் எல்லாம் உலகம் அறிந்த சூழல் ஆர்வலர்கள். இவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் வாழும் காலத்தில் ஒரே ஒரு மரம் நட்டாலும் கூட போதும். நம் எதிர்கால சந்ததியருக்கு நம் விட்டுச் செல்ல வேண்டியது சொத்து அல்ல. வாழ்வதற்கு பூமி. பூமி உயிர்ப்புடன் இருந்தால் அவரவர் வாழ்க்கையை அவரவர் கட்டமைத்துக் கொள்ள முடியும்.