கடந்த 10 நாட்களாக அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர சூறாவளி புயலான பிபர்ஜாய் புயல் நேற்று நள்ளிரவு ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடந்தது.


கரையை கடந்த பிபர்ஜாய் புயல்:


கடந்த 6 ஆம் தேதி அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது. வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர சுறாவளி புயல் (பிபர்ஜாய் புயல்)  வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை, மாண்ட்வி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகத்திற்கு அருகில் உள்ளது கரையை கடந்தது.


அதாவது அட்சரேகை 23.28° வடக்கு  மற்றும் தீர்க்கரேகை 68.56° கிழக்கில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 115 முதல் 125 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 140 கிமீ வேகத்தீலும் காற்று வீசியது. பின்னர் படிப்படியாக  வலுவிழந்து தீவிர புயலாக மாறியது.


தற்போது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் அருகே அதாவது 23.3° வடக்கு  அட்சரேகைக்கு அருகில் மற்றும் தீர்க்கரேகை 68.6° கிழக்கு , ஜக்காவ் துறைமுகத்திற்கு (குஜராத்) வடக்கே சுமார் 10 கிமீ தொலைவில் மற்றும் நலியாவின் மேற்கு-வடமேற்கில் 30 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


தற்போதைய நிலவரம் என்ன?


இது மேலும் வடகிழக்கு திசையில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் அருகே புயலாக வலுவிழக்கும் என்றும் இன்று மாலை தெற்கு ராஜஸ்தான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு  மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புயலின் காரணமாக கட்ச், தேவபூமி, துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.


ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 20 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலோர மாவட்டங்களில் இருக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பலத்த மழையுடன் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.


இந்த புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய கடலோர காவல் படையினர் உடன் முப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அரபிக் கடலில் உருவான முதல் புயல் இதுவே ஆகும். கடற்கரையில் அலைகள் 6 முதல் 14 மீட்டர் உயரம் வரை எழும் என்ற எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் கடந்த சில தினங்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.  நேற்று நள்ளிரவு புயல் கரையை கடந்த நிலையில் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.