நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில், ட்ரக் மெக்கானிக்கின் மகள் ஆர்த்தி ஜா அகில இந்திய அளவில் 192ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 513 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 936 மாணவர்களும், 13 மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 462 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். இதில் 20,38,596 பேர் தேர்வை எழுதினர். இதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் சராசரி தேர்ச்சி விகிதம் 56.2% ஆக உள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் 99.9999019% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றறார். இவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடன் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தியும் முதலிடம் பிடித்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் 4 பேர், முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
இதற்கிடையே ட்ரக் மெக்கானிக்கின் மகளும் 21 வயது இளம்பெண்ணுமான ஆர்த்தி ஜா வெற்றி பெற்றுள்ளார். 40 ஆண்டுகளாக ட்ரக் மெக்கானிக்காக இருக்கிறார் பிஷாம்பர். ஆர்த்தியின் தாய் இல்லத்தரசியாக உள்ளார். ஆர்த்தியின் இரண்டு சகோதரர்களும் எஸ்எஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். மூத்த சகோதரிக்குத் திருமணமாகி விட்டது.
ஃபேனை நிறுத்திவிட்டுப் படிப்பாள்
இந்த நிலையில் மகளின் வெற்றி குறித்து ஆர்த்தியின் தந்தை பிஷாம்பர் ஜா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார். அவர் கூறும்போது, ''ஆர்த்தி எப்போதும் ஃபேனை நிறுத்தி வைத்துவிட்டுப் படிப்பாள். ஏனெனில் ஃபேன் ஓடும்போது தூங்கிவிட்டால், அந்த நாளைய படிப்பு வீணாகிவிடும் என்று நினைப்பாள்.
எங்கள் குடும்பத்தில் முதல் மருத்துவர் ஆர்த்திதான். இது மிகப் பெரிய சாதனை. ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பெருமைப்படுத்தி விட்டாள். குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் இருந்தாலும், ஆர்த்தி மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்'' என்று பிஷாம்பர் ஜா தெரிவித்தார்.
தலைவலி உள்ளிட்ட உடல்நலக் குறைவும் ஆர்த்திக்கு இருந்துள்ளது. எனினும் அதனால் தேர்வுக்குத் தயாராவதை ஆர்த்தி நிறுத்தவில்லை. தலைவலிக்காக ஆர்த்தி ஆக்ராவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸில் படிக்க ஆசை
மருத்துவ கோச்சிங் வகுப்புகளுக்குத் தேவைப்படும் பணத்தை சேமிக்க, பள்ளி மாணவர்களுக்கு ஆர்த்தி பாடம் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறும்போது, ''2018ஆம் ஆண்டு சிபிஎஸ்இ வாரியத்தில் பிளஸ் 2 வகுப்பை முடித்தேன். பொதுத் தேர்வில் 85 சதவீத மதிப்பெண்கள் கிடைத்தன. ஒரு தனியார் பள்ளியில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். மாதம் 5 ஆயிரம் ஊதியம் கிடைத்தது. 10 கி.மீ. தூரம் பயணித்து பயிற்சி மையத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு 3 கி.மீ. தூரம் பயணித்து, 10 ரூபாயை மிச்சப்படுத்தினேன். பயிற்சி மையத்தில் படித்துவிட்டு வந்தபிறகு, தினந்தோறும் 6 முதல் 8 மணி நேரம் படிப்பேன்.
பள்ளியில் கிடைத்த பணத்தை வைத்து பயிற்சி மையத்துக்கு செலவழித்தேன். எனக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் நன்றாக வரும். ஆனால் உயிரியல் பாடம் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் என்சிஇஆர்டி உயிரியல் பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படித்துக்கொண்டே இருப்பேன்.
அத்துடன் என்னுடைய சகோதரர்களுடன் இணைந்து, வீட்டிலேயே 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூஷன் எடுப்பேன்'' என்று ஆர்த்தி தெரிவித்தார்.
தன் சாதனை குறித்து ஆர்த்தி பேசும்போது, ''என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணம் இது. என்னுடைய அப்பாதான் எனக்கு முன்மாதிரி. ஏனெனில் எப்போதெல்லாம் நாங்கள் தோற்றுப் போகிறோமோ அப்போதெல்லாம் அவர் உற்சாகப்படுத்தி, அடுத்தகட்டம் செல்ல ஊக்கப்படுத்துவார். அகில இந்திய அளவில் 192ஆவது இடம் பெற்றுள்ளேன்.
ஓபிசி பிரிவில் 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய எம்பிபிஎஸ் டிகிரிக்குப் பிறகு, நரம்பியல் சார்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளேன்'' என்று விடைகொடுக்கிறார் ஆர்த்தி.