பில்கிஸ் பானோ வழக்கின் அரசுத் தரப்பு சாட்சி ஒருவர், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், உயிருக்கு அஞ்சுவதாகவும் இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் கலவரம்
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதியன்று குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற ஐந்தே மாதங்களில், உ.பி.யின் அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இதுதொடர்பாக மதக்கலவரம் ஏற்பட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பில்கிஸ் பானுவுக்கு அப்போது 21 வயது ஆகியிருந்தது, 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3-ம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா, உட்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.
தற்போது மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்க காரணம் இதுதான்... பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை சமீபத்தில் குஜராத் அரசு விடுதலை செய்ததுதான். குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்ததை தொடர்ந்து, 11 பேரை அந்த மாநில அரசு விடுவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் முக்கிய சாட்சியாக உள்ளார் இம்தியாஸ் காஞ்சி.
நேரில் மிரட்டல்
குற்றவாளிகள் மற்றும் பில்கிஸ் பானோ வசிக்கும் சிங்வாட் (ரந்திக்பூர்) கிராமத்தைச் சேர்ந்த சாட்சியான இம்தியாஸ் காஞ்சி, செப்டம்பர் 15-ஆம் தேதி, சிங்வாட் கிராமத்திலிருந்து தேவ்கத் பாரியாவில் உள்ள தனது தற்போதைய இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, குற்றவாளி ராதே ஷ்யாம் ஷா பிப்லாட் ரயில்வே தடுப்பில் அவரைப் பார்த்து, "என்னை குற்றமுள்ளவர் என்று அழைப்பதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது, நான் இப்போது வெளியே வந்துவிட்டேன்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்: பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என சொன்னால் தண்டணையா? - RBI சொல்வது என்ன?
தகுந்த நடவடிக்கை வேண்டும்
அவர் கூறியதாக பதிவுசெய்யப்பட்ட செப்டம்பர் 19 தேதியிட்ட அறிக்கையில், ”ஷாவும் அவரது வாகனத்தின் ஓட்டுநரும்” கிளம்பும் முன் அவரைப்பார்த்து சிரித்ததாக காஞ்சி கூறினார். சம்பவத்தைத் தொடர்ந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய காஞ்சி, குற்றவாளிகளுக்கு எதிராக "தகுந்த சட்ட நடவடிக்கைகளை" எடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
காஞ்சி, குஜராத் உள்துறைச் செயலர், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாஹோட் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாஹோத் காவல்துறைக்கும் தனது ப நகல்களை அனுப்பியுள்ளார்.
காஞ்சி கூறிய சாட்சிகள்
சிறப்பு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நரேஷ் மோடியா விசாரணையின் போது இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது கையில் ராம்பூரி கத்தியை வைத்திருந்ததையும், மற்றொரு குற்றவாளி பிரதீப் மோடியா கற்களை வீசுவதையும் பார்த்ததாகவும் காஞ்சி குற்றம் சாட்டினார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அடுத்த நாள் ரந்திக்பூரில் உள்ள அவரது இல்லத்தின் அருகே கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
கும்பலைப் பார்த்த காஞ்சியும், அவரது தாயும் சகோதரியும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி லாலு மடியா பர்மர் என்பவரின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர், அங்கு அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி இருந்தனர் என்றும் கும்பலில் இருந்து யாரும் பர்மாரின் வீட்டிற்குள் நுழையவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் அவர் தனது வீட்டை எரிப்பதையும் அவரது உடைமைகளை சூறையாடுவதையும் நேரில் பார்த்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்