பீகாரில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தில் 100க்கு 151 மார்க் அளித்து அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது பல்கலைக்கழகம். பீகார் மாநிலத்தின் தார்பங்கா உள்ளது லலித் நாராயண் மிதிலா பல்கழைக்கழகம் (  Lalit Narayan Mithila University LNMU). இந்தப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்தது.


இதில் பிஏ ஹானர்ஸ் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவில் பயின்ற மாணவர் தான் 100க்கு 151 மதிபெண் பெற்றிருக்கிறார். இது குறித்து அவர், தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் எங்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியலை கொடுத்தனர். தாள் 4 அரசியல் அறிவியல் பாடம். அதில் நான் 100க்கு 151 மதிப்பெண் வாங்கியதாகப் பதிவாகியிருந்தது. அதைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். என்னதான் எனக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கியிருந்தாலும் அதை ஒருமுறை பல்கலைக்கழக தேர்வு துறை ஊழியர்கள் ஒருமுறை சரி பார்த்திருக்கலாம் அல்லவா? என்றார்.




ஜீரோ மார்க்:


ஒருவருக்கு 151 மதிப்பெண்களை வாரி வழங்கிய பல்கலைக்கழகம் இன்னொரு மாணவருக்கு ஜீரோ வழங்கியுள்ளது. அக்கவுண்டிங் அண்ட் ஃபைனான்ஸ் பேப்பரில் பிகாம் மாணவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அவர் பூஜ்ஜியம் பெற்றிருந்தாலும் கூட அவர் பாஸ் செய்துவிட்டதாகவும் சான்றிதழில் அச்சடித்துள்ளது.


இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “இது டைப்போ எரர் வகையறாவைச் சேர்ந்தது. தேர்வு வினாத்தாள் மதிப்பீடுகள் நியாயமாக, நேர்மையாக, துல்லியமாக நடந்துள்ளன. இந்த தவற்றுக்கு வருந்துகிறோம். அனைத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழும் திரும்பப் பெறப்பட்டு சரி பார்த்து புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.


அதேபோல், 151 மதிப்பெண் பெற்ற மாணவருக்கும், பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவருக்கும் மதிப்பெண் தவறுகள் சரி செய்யப்பட்டு உடனடியாக புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற சான்றிதழ்களையும் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


சம்பளத்தை திருப்பிக் கொடுத்த பேராசிரியர்:


இதே பீகார் மாநிலத்தில் தான் அண்மையில் வகுப்பு எடுக்காததால் சம்பளப் பணத்தை பல்கலைக்கழத்திற்கே திருப்பி அனுப்பி ஆச்சரியப்பட வைத்தார் பேராசிரியர் ஒருவர்.


பீகாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார் (வயது 33). இந்த கல்லூரி பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாலன் குமார் 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்ததில் இருந்து அவர் பெற்ற மொத்தச் சம்பளமான ரூ. 24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி அளித்தார். பல்கலைக்கழக பதிவாளரிடம் குமார் ரூ.23,82,228 காசோலையை வழங்கினார். மூன்று வருடங்களாக மாணவர்கள் வகுப்புக்கு வராததால் வகுப்புகள் சரிவர எடுக்க வாய்ப்பில்லை. அதனால் சம்பளத்தை திரும்பத் தருகிறேன் என்று அவர் கூறினார்.