பிகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட விசாரணை கைதி மீது எட்டு கொலை வழக்கு உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு:
காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் விசாரணை கைதி அபிஷேக் குமார் என்ற சோடே சர்க்கார் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதுகுறித்து பாட்னா காவல்துறை தரப்பு பேசுகையில், "பாட்னா அருகே உள்ள பிஹ்தா நகரை சேர்ந்த அபிஷேக் குமார் என்ற சோடே சர்க்கார் (34), ஒரு கொலை வழக்கு தொடர்பாக பாட்னாவின் பீர் சிறையில் சுமார் ஒரு வருடமாக அடைக்கப்பட்டிருந்தார்.
பெயூர் சிறையில் இருந்து இன்று பிற்பகல் டானாபூர் சிவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இரண்டு கான்ஸ்டபிள்கள், அவர்களில் ஒருவர் ஆயுதம் ஏந்தியபடி, அபிஷேக் குமாருடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்" என தெரிவித்தது.
இது தொடர்பாக விரிவாக பேசிய பாட்னா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா, "நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அபிஷேக் குமாரை அழைத்துச் சென்றபோது, ஒரு ஆசாமி அவரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். ஆனால், அவர் ஆயுதமேந்திய காவலரால் தாக்கப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணை கைதி:
ஆனால், கூட்டத்தில் இருந்த இரண்டாவது ஆசாமி, அபிஷேக் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய இருவரும் முசாபர்பூரில் இருந்து வந்தவர்கள். இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். கொலையின் உள்நோக்கம் பற்றி ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்" என்றார்.
நீதிமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா, "இது கவலைக்குரிய விஷயமாகும். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் வந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் விரைந்து செயல்பட்டு தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்தனர். ஆனால், நீதிமன்ற பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்" என்றார்.