சமீப காலமாக, சிறைகளில் கைதிகள் செல்போன், போதை பொருள் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதை கட்டுப்படுத்த, சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் உள்ள சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


அதிரடி சோதனை:


அப்போது, கைதிகள் செல்போனை பயன்படுத்தி இருக்கின்றனர். எனவே, சிறை அதிகாரிகளிடம் மாட்டி கொண்டு விடுவோமா என்ற அச்சத்தில் கைதி ஒருவர் செல்போனை விழுங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. கைதியான கைஷர் அலி, நேற்று முன் தினம் ஆய்வின் போது தொலைபேசியை விழுங்கியுள்ளார்.


வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்:


இந்த சூழ்நிலையில், நேற்று அலிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார், "சிறை அதிகாரிகளை அழைத்து என்ன நடந்தது என்பது குறித்து கைஷர் அலி விவரித்துள்ளார்.


அவர் உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கைதி அலியின் எக்ஸ்ரேயில் அவரது வயிற்றில் துகள் இருப்பது தெரியவந்தது" என்றார்.


இது தொடர்பாக மருத்துவமனையின் அவசர பிரிவு மருத்துவர் சலாம் சித்திக் பேசுகையில், "கைதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றின் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் துகள்கள் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதை முழுமையாக விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.


மருத்துவமனையால் மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டு, கைதி மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.


கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ் சட்டம்) விதிகளின் கீழ் கோபால்கஞ்ச் காவல்துறையினரால் அலி கைது செய்யப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.


அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை:


பிகார் சிறையில் கைதிகள் செல்போனை பயன்படுத்திய சம்பவம், சிறை அதிகாரிகள் எந்த அளவு செயல்படுகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


கடந்த 2021ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 35 செல்போன்கள், ஏழு சிம்கார்டுகள் மற்றும் 17 செல்போன் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கதிஹார், பக்சர், கோபால்கஞ்ச், நாலந்தா, ஹாஜிபூர், ஆரா, ஜெகனாபாத் மற்றும் மாநிலத்தில் உள்ள சில சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது.