பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள பர்ஹாரியா என்ற நகரத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, வன்முறையைத் தூண்டியதாக கூறி உள்ளூர் மசூதியில் இருந்து 8 வயது சிறுவன் உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
70 வயதான முகமது யாசின் மற்றும் அவரது எட்டு வயது பேரன் ரிஸ்வான் குரேஷி ஆகியோரை காவல்துரையினர் கைது செய்தனர். அதே நேரத்தில் இருவரும் நிரபராதி என்றும் அவர்கள் அப்படி பட்டவர்கள் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்து கைது செய்த இருவரையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 70 வயதான யாசினுக்கு சமீபத்தில்தான் இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் மேலும் உடல்நலக் கோளாறுகள் இருக்கிறது என்றும் குடும்பத்தார் தெரிவித்தனர்.
ரிஸ்வானின் சகோதரர் அசார் மக்தூப் தெரிவிக்கையில், “எனது இளைய சகோதரர் ஒரு தனி கைதிகள் வார்டில் வைக்கப்பட்டு இருக்கிறான். முதலில் அவனை சந்திக்க எனது குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு எங்களுக்கு பார்க்க வாய்ப்பு கிடைத்ததும் என் அம்மா அவனையும், அவன் கையில் இருந்த விலங்கையும் பார்த்து பயந்து போனார்கள். அதைவிட கொடுமை என்னவென்றால் என் தம்பியால் தனது சொந்த தாயை அடையாளம் காண முடியவில்லை. தொடர்ந்து வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அழுதுகொண்டே இருந்தான்” என்று தெரிவித்தார்.
8 வயது சிறுவன் உட்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரிஸ்வானின் குடும்பத்தினர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் அவரை விடுவிக்க பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை முதல் ட்விட்டர் பக்கத்தில் #releaserizwan என்ற ஹேஷ்டேக்கை இந்தியளவில் மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடந்தது என்ன..?
மகாவீர் அகாரா பேரணியின் போது முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பர்ஹாரியா தெருக்களில் வன்முறை வெடித்தது. முஸ்லீம் பகுதிக்குள் நுழையும் போது இந்து கும்பல் இஸ்லாமிய வெறுப்பு கோஷங்களை எழுப்புவதும், ஆபாசமான பாடல்களை இசைப்பதும் கேமராவில் வெளியாகியது. இதையடுத்து, ஒரு சில பேர் வாள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்தி சண்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக, இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு கல் வீச்சு போன்ற நாசவேலைகள் அரங்கேறியது.