கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கத்தினால், சாதாரண குடிமக்கள் மட்டுமின்றி பெரும் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், ஜனதா தள எம்.எல்.ஏ.வுமான மேவாலால் சௌத்ரி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே அவரது உயிர் பிரிந்தது.




அவரது மறைவிற்கு பீகார் மாநிலத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், மேவாலால் சௌத்ரி புகழ்பெற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலர் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், அவரது மறைவு கல்வி, அரசியல் மற்றும் சமூக சேவைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


அவரது மறைவிற்கு பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவும் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பீகாரில் கபில்தேவ் கமத், வினோத்குமார் சிங் ஆகிய அமைச்சர்கள் இருவரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு உயிரிழந்தனர். இதுதவிர, முன்னாள் அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங்கும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




கொரோனா பரவலில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்களும் அடுத்தடுத்து பலியாகி வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவரின் மறைவு பீகார் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


ஏற்கனவே கொரோனாவால் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவு இசைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து இன்னும் பல பிரபலகங்கள் மறைந்ததால் ஒட்டுமொத்த தமிழகமும் கொரோனாவின் கோரத்தண்டவத்தை கண்டு அஞ்சினர். அதன் பின் மீண்டும் சிறிய தொய்வு ஏற்பட்ட நிலையில், இரண்டாவது அலைவின் தாக்கம் அசுர வேகத்தில் இருப்பதால் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தொடர்பான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டும், அதன் மீது மக்களுக்கான சந்தேகம் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதால், அது தொடர்பான அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது. அதற்கு நடிகர் விவேக் மரணம் ஒரு காரணம் ஆனது. 


இருப்பினும் கொரோனா தடுப்பூசி தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்பதால் பொதுமக்கள் முடிந்த வரை தயங்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.