சகோதர, சகோதரி உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கயிறு கட்டிவிடுவது வழக்கம். தங்களை பாதுகாக்கும் நபர் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டப்படுகிறது.


மரத்திற்கு ராக்கிய கட்டிய பீகார் முதல்வர்: ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டுவதுடன், அவர்களது ஆரத்தி எடுப்பது வழக்கம். அந்த வகையில், பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை, தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர், மரத்திற்கு ராக்கி கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரு வேறு யாரும் அல்ல பீகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ் குமார்.


ரக்சா பந்தன் அன்று சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர் மரத்திற்கு ராக்கி கட்டியுள்ளார். பீகார் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோருடன் சென்று மரத்திற்கு ராக்கி கட்டியுள்ளார் நிதிஷ் குமார்.


ஏன் தெரியுமா? இதுகுறித்து பீகார் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பீகாரின் பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநில அரசு 2012 முதல் ரக்‌ஷா பந்தனை 'பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்' ஆக கடைபிடித்து வருகிறது.


 






சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நட்டு அவற்றை காப்பாற்ற வேண்டும். ஜல் ஜீவன் ஹரியாலி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசு ஊக்குவித்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.