கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "பெங்களூருவில் உள்ள ஜிகானி நகரில் ஆகஸ்ட் 4 முதல் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஐந்து பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. முதல் நபருக்கு கண்டறியப்பட்ட பிறகு, சுற்றியுள்ள பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது, மேலும் ஐந்து பேருக்கு ஜிகா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜிகாவுக்கு சாதாரண அறிகுறிகளே தென்படுகின்றன. டெங்குவுக்கு அளிக்கும் அதே சிகிச்சைதான் ஜிகாவுக்கும் அளிக்கப்படும்" என்றார்.
உலக சுகாதார அமைப்பின் படி, ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக தோலில் தடிப்புகள், காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி ஆகியவை நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காய்ச்சல்-102°F (38.9°C) காய்ச்சல் இருக்கும்.
- தடிப்பு -உடலில் சிகப்பு நிற தடிப்புகள் ஏற்படும். அதோடு, முகம் மற்றும் உடலில் மற்ற பகுதிகளிலும் பரவும். அரிப்புடன் கூடிய தடிப்புகளாக இருக்கும்.
- விரல்கல், கை, கால் மூட்டுப் பகுதிகளில் வீக்கம், வலி ஏற்படும்.
- கண்களின் நிறம் சிகப்பு அல்லது பிங்க் நிறமாக மாறும்.
- வைரஸ் தொற்று ஏற்படுவதால் இருக்கும் தசை வலி உண்டாகும்.
- உடல்சோர்வு, வயிறு வலி, வாந்தி அல்லது கண்களில் வலி இருக்கும்.
தடுப்பது எப்படி?
பகலில் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். வீடு, அலுவலகம் என சுற்றியுள்ள பகுதியில் கொசு உற்பத்தியாகும் வாய்ப்புகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கவிடுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.