பீகார் முதல்வர் நித்திஷ் குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கல்லூரிக் கால நினைவுகளைக் குறித்து பேசியிருப்பதுடன், தான் பொறியியல் பட்டப்படிப்பு பயின்ற போது தனது வகுப்பில் ஒரு மாணவி கூட இருந்தது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பீகார் முதல்வர் நித்திஷ் குமார் தற்போது சூழல் மேம்பட்டிருப்பதாகவும், அதிகளவில் பெண்கள் பொறியியல், மருத்துவப் பட்டப் படிப்புகளை விரும்பிப் பயில்வதாகவும் கூறியுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மகத் மகிளா கல்லூரியில் 504 படுக்கைகளுடன் கூடிய பெண்கள் விடுதியைத் திறக்கும் நிகழ்ச்சியில் கடந்த மே 23 அன்று கலந்துகொண்டார் பீகார் முதல்வர் நித்திஷ் குமார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பீகார் முதல்வர் நித்திஷ் குமார் தனது பொறியியல் பட்டப்படிப்புக் காலத்தை நினைவுகூர்ந்தார். `நாங்கள் பொறியியல் கல்லூரியில் படித்த போது, எங்கள் வகுப்பில் ஒரு மாணவி கூட இல்லை. அது மோசமான காலம். எங்கள் வகுப்புக்கு எப்போதெல்லாம் பெண்கள் யாரேனும் வருகிறார்களோ, அப்போதெல்லாம் மாணவர்கள் குழுக்களாக நின்று அவர்களைக் காண்பார்கள்.. அப்போதைய சூழல் அவ்வாறு இருந்தது’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `தற்போது பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்காக கல்லூரிகளில் சேர்ந்த எத்தனை பெண்கள் கல்வி பெறுகிறார்கள் பாருங்கள்!’ என்றும் கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் நித்திஷ் குமார் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கான கல்வியின் நிலையையும், அப்போதைய கால கட்டத்தில் பெண்கள் பொறியியல், மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளைப் பெற முடியாத நிலை இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
`எங்கள் அரசு பீகார் மாநிலத்தில் அமைந்த போது, உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கினோம். இதனால் நமது சகோதரிகளும், மகள்களும் பட்டப்படிப்புகளைப் பயின்று, மருத்துவர், பொறியியலாளர் என உயர்ந்திருக்கிறார்கள். உயர்கல்வியின் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், பெண்கள் உயர் அதிகாரிகளாக பதவியேற்கவும் எங்கள் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது’ என்றும் பீகார் முதல்வர் நித்திஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நித்திஷ் குமார் வழக்கமாக தன் பெர்சனல் கதைகளைக் கூறும் பழக்கம் கொண்டவர் அல்ல என்பதால், மாணவிகளால் நிரம்பி இருந்த அரங்கத்தில் அவர் தன் கல்லூரிக் கால நினைவுகளைக் கூறியது மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.