உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 


இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28 ஆம் தேதி அதன் நிறுவப்பட்ட வைர விழாவைக் கொண்டாட உள்ளது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றக் கட்டிடம் எதுவும் இல்லாததால், இந்திய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றக் கட்டிடத்தில் திறக்கப்பட்டது.


1950ஆம் ஆண்டு அசல் அரசியலமைப்பு இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஏழு நீதிபதிகளை மட்டுமே கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் 1950-ல் இருந்து நீதிபதிகளின் எண்ணிக்கையை 6 முறை அதிகரித்து 2019-ல் தற்போதைய பலமாக 34 ஆக உயர்த்தியுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) உச்ச நீதிமன்றத்தில் வைர விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் நினைவாக நாளை கூடுதல் கட்டிட வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொள்கிறார்.


உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டை தொடங்கி வைக்கும் பிரதமர், உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள்,டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.


உச்ச நீதிமன்ற டிஜிட்டல் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் மக்களுக்கு இலவசமாகவும், மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்வதே. டிஜிட்டல் அறிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இதன்படி, 1950ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய அனைத்து 519 தொகுதிகளும்,  டிஜிட்டல் வடிவத்தில், புக்மார்க் செய்யப்பட்ட, பயனருக்கு ஏற்றதாக மற்றும் திறந்த அணுகலுடன் கிடைக்கும்.


மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மின்னணு வடிவத்தில் நீதிமன்ற பதிவுகளை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 என்பதாகும்.  இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சு மொழியை எழுத்து வடிவில்  படியெடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு  பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருமொழி வடிவத்தில் பயனருக்கு ஏற்றவகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.