மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது. அந்த வகையில், பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களும் சாதிவாரி பொருளாதார, கல்வி நிலை குறித்த தகவல்களையும் பிகார் அரசு வெளியிட்டது.


விஸ்வரூபம் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்:


அதன்படி, பிகார் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. மாநில மக்கள் தொகையில் 15.5 சதவிகிதத்தினர் பொது பிரிவினர் என கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, சாதிவாரி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு வரம்பை பிகார் அரசு உயர்த்தியது.


இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பிகார் அரசுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏக் சோச் ஏக் பிரயாஸ் என்ற அரசு சாரா அமைப்பு, இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஏக் சோச் ஏக் பிரயாஸ் அமைப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் ஆஜரானார். அப்போது, வாதிட்ட அவர், "விஷயங்கள் வேகத்தில் நகர்கின்றன. இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் உள்ளது. 


இதற்கிடையே இடஒதுக்கீட்டை 50% லிருந்து 70% ஆக உயர்த்தியுள்ளது பிகார் அரசு. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வறிக்கையினை சமர்ப்பிக்கிறோம். இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட விரும்புகிறோம்" என்றார்.


உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை: 


வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க விரும்புவர்களுக்கு உதவும் வகையில் கணக்கெடுப்பு முடிவுகளை பொது தளத்தில் வெளியிட வேண்டும்" என்றார்.


இதற்கு பதில் அளித்த பிகார் அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "கணக்கெடுப்பு பொது களத்தில் கிடைக்கிறது. இது ஏற்கனவே மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது" என்றார். இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது.


சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம், அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை, காங்கிரஸ் முக்கிய பிரச்னையாக கையில் எடுத்துள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் கூட, இந்த பிரச்னைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது. ஆனால், தேர்தலில் இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.