ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு இந்திய ராணுவ வீரர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இதற்காக, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். சாதனை படைத்து அசத்திய 128 காலாட்படை பட்டாலியன் மற்றும் பிராந்திய ராணுவத்தின் சுற்றுச்சூழல் பணிக்குழுவை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டியுள்ளார்.


இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் எல்லைப் பிரிவு ஊர்க்காவல் படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அமைச்சர்  தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


உலக சாதனை படைத்த ராணுவம்:


சமூக ஊடக ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய அமைச்சர், இதுகுறித்து பதிவிட்டிருப்பதாவது, "ஜெய்சால்மரில் "சிறப்பு மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் 11 மணி முதல் 12 மணி வரை 5,19,130 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.


128 காலாட்படை பட்டாலியன் (பிராந்திய ராணுவம்) ராஜபுதன ரைபிள்ஸின் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரதமரின் இயக்கமான "தாயின் பெயரில் ஒரு மரம்", பிராந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு திட்டம் "பங்கேற்பு மற்றும் பொறுப்பு" ஆகியவற்றின் கீழ் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் எல்லை பிரிவு ஊர்க்காவல் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


இத்தனை ரெக்கார்ட்ஸா?


பிராந்திய ராணுவ பிரிவு, "மரங்களைப் பாதுகாப்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்" என்ற குறிக்கோளுடனும், "மரங்களைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடனும் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அவை லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்டன.


 






ஒரு குழுவால் ஒரு மணி நேரத்தில் நடவு செய்யப்பட்ட அதிகபட்ச மரக்கன்றுகள், ஒரே மணி நேரத்தில் அதிக  எண்ணிக்கையிலான பெண்கள் நட்ட அதிகபட்ச மரக்கன்றுகள், ஒரே இடத்தில்  ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள், அதிக எண்ணிக்கையிலானவர்களால்  நடப்பட்டது ஆகிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.