இன்ஸ்டாகிராம் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோவர்களை ஈட்டிய முதல் இந்தியனாகவும், உலக அளவில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட விளையாட்டு வீரர்களும் மூன்றாவது இடத்தையும் பிடித்தவராக இருக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவரது சகோதரர் விகாஸ் கோலி தற்போது சுமார் 1.35 லட்சம் ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறார். தனது சகோதரர் விராட் கோலியை விட குறைவான ஃபாலோவர்களைக் கொண்டிருப்பதாக சமீபத்தில் விராட் கோலி ரசிகர் ஒருவர் விகாஸ் கோலியைச் சீண்டியுள்ளார்.


சர்வதேச அளவில் கால்பந்து வீரர்கள் க்றிஸ்டியானோ ரொனால்டோ சுமார் 453 மில்லியன் ஃபாலோவர்களையும், அடுத்து லியோனெல் மெஸ்ஸி சுமார் 337 மில்லியன் ஃபாலோவர்களையும் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். 


தனது சகோதரர் விராட் கோலி சுமார் 200 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, விகாஸ் கோலி கலாய்க்கப்பட்ட போது, அவர் அந்த ரசிகரிடம் ஆக்கப்பூர்வமாக எதையேனும் செய்யக் கூறியதோடு, தேவையில்லான அறிவுரைகளை வழங்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். 


அந்த ரசிகர் விகாஸ் கோலியின் பதிவு ஒன்றின் கமெண்டில், `அண்ணன் 200 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ளார். உன்னிடம் 1 மில்லியன் ஃபாலோவர்கள் கூட இல்லை’ என விமர்சிக்க, விகாஸ் கோலி அதற்குப் பதிலளிக்கும் விதமாக, `குழந்தை.. எதையேனும் ஆக்கப்பூர்வமாக செய்.. தேவையில்லாத அறிவுரைகளை வழங்க வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 



அதிக அளவில் ஃபாலோவர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் உலகளவில் 17வது இடம்பெற்றுள்ள விராட் கோலி, ஆசியாவிலேயே அதிக ஃபாலோவர்களைக் கொண்டவராகவும் இருக்கிறார். அதே வேளையில், அவரது சகோதரர் விகாஸ் கோலி ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் இயங்குபவர். தொடர்ந்து தனது ஜிம் அனுபவங்கள் பற்றிய வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிட்டு வரும் விகாஸ் கோலி, தொழிலதிபராகவும், தனது சகோதரரின் தொழில்களைக் கவனிப்பவராகவும் இருந்து வருகிறார். 






ஐபிஎல் போட்டிகளின் தற்போதைய 2022ஆம் ஆண்டு சீசன் முடிவடைந்துள்ள நிலையில், விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து விடுமுறை எடுத்து, அதனைத் தற்போது மாலத்தீவுகளில் கழித்து வருகிறார். இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான டி20 போட்டிகளிலும் விராட் கோலி கலந்துகொள்ளவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, விராட் கோலி பேட்டிங்கில் ஃபார்ம் இழந்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் மொத்தமாகவே 341 ரன்களை எடுத்துள்ளார் விராட் கோலி.