உருமாறிய கொரோனாவாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் வேகம் எடுத்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு நேற்று இரவு பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், “இந்தியாவில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதே போல ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவபணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” என்று பேசினார். 



மேலும் “ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  






தேசிய தடுப்பூசி இயக்கம் குறித்து பேசிய அவர்,  இந்தியாவின் மக்கள் தொகையில் தகுதியானவர்களில் 61 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 90  சதவீதத்திற்கும் அதிகமானவர்ககள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.     






மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில், 18 லட்சம்  தனிமைப்படுத்தல் படுக்கைகள், 1.4  தீவிர சிகிச்சைப்பிரிவு வசதியுடன் கூடிய படுக்கைகள், 5 லட்சம்  ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன.  நாடு முழுவதும் 3000 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவித்தார்.  






இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க 12 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு கோவேக்சின் மருந்தை பயன்படுத்த பயோடெக் நிறுவனம் விண்ணப்பம் அளித்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்குன் பயன்படுத்த அனுமதிக்க பரிந்துரைத்தது. 


கொரொனா நிபுணர் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்ட நிலையில் மற்றொரு நிபுணர் குழு அதனை மதிப்பீடு செய்தது. அதனைத் தொடர்ந்து பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை பெற்ற தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளார். அது தொடர்பான அனுமதி அறிக்கையையும் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


நேற்று பிரதமர் மோடி 15 முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்களுக்கு வரும் ஜனவரி மாதம்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறிய நிலையில், 12 முதல் 18 வரையுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வாங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த நிலையில் இதில் யாருக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்படும் என்றும், இரண்டில் எது உண்மை என்றும் கேள்வி எழுந்துள்ளது.