காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், ஞாயிற்றுக்கிழமை அன்று 11ஆவது நாளை எட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்கள், பயணத்தை காலை 6.30 மணிக்கு தொடங்கினர்.


 






நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் ராகுல் காந்தி கேரளாவின் ஹரிபாடில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.


ரமேஷ் சென்னிதலா, கே. முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், கே.சி.வேணுகோபால், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்றைய நடைப்பயணத்தின் முதல் கட்டமான 13 கிலோமீட்டர் தூரத்தை ராகுல் காந்தியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.


சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி, அவருக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை அவ்வப்போது மீறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பிறகு, ராகுல் காந்தி அந்த வழியில் உள்ள ஒரு ஹோட்டலில் தேநீர் அருந்துவதற்காக ஓய்வு எடுத்தார். 


மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைபயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழாவில் ஒரு சிறுமிக்கு ராகுல் காந்தி அவரது காலணிகளை அணிய உதவுவதைக் காணலாம். இச்சம்பவம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


நடைபயணத்தின் காலை அமர்வு ஒட்டப்பனாவை அடைந்தவுடன் நிறைவடையும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் ஆலப்புழாவின் அருகிலுள்ள கிராமமான கருவாட்டாவில் ஓய்வெடுக்க உள்ளார்கள். 7.5 கிலோமீட்டர் தூரம் செல்லும் யாத்திரையின் மாலைப் பயணம், வந்தனம், டி டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. 


உறுப்பினர்கள் 3.4 கி.மீ தொலைவில் உள்ள புன்னப்ராவில் உள்ள கார்மல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தங்க உள்ளனர். காலை இடைவேளையின் போது குட்டநாட்டு விவசாயிகளை ராகுல் காந்தி சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்  ட்வீட் செய்துள்ளார்.


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 11வது நாள் இன்று காலை 6:30 மணிக்கு ஹரிபாடில் இருந்து தொடங்கியது. தேசிய மற்றும் மாநில யாத்ரிகள் 13 கிமீ தூரம் நடந்து ஓட்டப்பனாவில் உள்ள ஸ்ரீ குருட்டு பகவதி கோயிலில் காலை இடைவேளைக்காக ஓய்வு எடுப்பார்கள். அங்கு குட்டநாடு மற்றும் அண்டை மாவட்ட விவசாயிகளுடன் உரையாடல் மேற்கொள்வார்" என்று ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.