காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், 146 நாட்கள் நடந்த இந்திய ஒற்றுமை பயணம் நாளை முடிவுக்கு வருகிறது. இதன் நிறைவு விழாவில் 12 எதிர்கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக 21 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் 12 எதிர்கட்சிகள் மட்டுமே கலந்து கொள்கிறது.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்டவை நிறைவு விழாவை புறக்கணிக்க உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே), கேரள காங்கிரஸ், ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு, மெஹபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகள் ஸ்ரீநகரில் நடைபெறும் நிறைவு விழாவில் கலந்து கொள்கின்றன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சகோதரர் ராகுல் காந்தியுடன் இணைந்து நேற்று நடைபயணத்தில் கலந்து கொண்டார். முன்னதாக, பாதுகாப்பு மீறல் காரணமாக நேற்று முன்தினம் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, அவந்திபோராவில் உள்ள செர்சூ கிராமத்தில் இருந்து நடைபயணம் மீண்டும் தொடங்கியது. அதில், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தியும் நடைபயணத்தில் இணைந்தார்.
நடைபயணத்தின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என உள்ளூர் போலீசார் மறுத்தனர். பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) விஜய் குமார் நேற்று நிராகரித்து விளக்கம் அளித்திருந்தார்.
வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.