உலகின் மெதுவான நகரங்களின் பட்டியல்:
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான டாம் டாம், கடந்த ஆண்டில் உலக நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டது. 6 கண்டங்களில் 56 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், உலகின் மெதுவான நகரங்கள் எனும் தலைப்பில், 389 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்தின் லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, அந்த நகரில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிற்கு இரண்டாவது இடம்:
உலகின் மெதுவான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அங்கு 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 29 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகிறது. போக்குவரத்து நெரிசலால் மட்டுமே அதிக நேரத்தை இழக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு நான்காவது இடத்தில் உள்ளது. ”அதிக CO2 உமிழ்வுகள் உள்ள நகரங்கள்” என்ற அட்டவணையில் பெங்களூரு ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெங்களுருவில் ஆறு மைல் சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் பெட்ரோல் கார்கள் ஆண்டுக்கு சராசரியாக 974 கிலோ எடையிலான CO2 உமிழ்வவை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆண்டுக்கு 1,133 கிலோ சராசரி CO2 உமிழ்வுடன் லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய நகரங்கள்:
உலகின் மெதுவான நகரங்களின் பட்டியலில், பெங்களூருவை தவிர்த்து புனே நகரம் 6வது இடத்திலும், டெல்லி 34வதுஇடத்திலும் உள்ளது.
உலகின் மெதுவான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்கள்:
நகரம் நேரம் (10 கி.மீ. தூரத்தை கடக்க ஆகும் நேரம்)
லண்டன் (இங்கிலாந்து) 36 நிமிடம் 20 விநாடிகள்
பெங்களூரு 29 நிமிடங்கள் 10 விநாடிகள்
டப்ளின் (அயர்லாந்து) 28 நிமிடங்கள் 30 விநாடிகள்
சப்போரோ (ஜப்பான்) 27நிமிடங்கள் 40 விநாடிகள்
மிலன் (இத்தாலி) 27 நிமிடங்கள் 30 விநாடிகள்
புனே 27 நிமிடங்கள் 20 விநாடிகள்
புக்கரெஸ்ட் (ருமேனியா) 27 நிமிடம் 20 விநாடிகள்
லிமா (பெரு) 27 நிமிடம் 10 விநாடிகள்
மணிலா (பிலிப்பைன்ஸ்) 27 நிமிடம்
பொகோடா (கொலம்பியா) 26 நிமிடங்கள் 20 விநாடிகள்
அதிகரிக்கும் விலை:
போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருட்களின் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வானது, உலகளவில் சராசரியாக பெட்ரோ கார்களின் விலையை 27 சதவிகிதம் அளவிற்கும், டீசல் கார்களின் விலையை 44 சதவிகிதம் அளவிற்கும் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும், டம் டம் நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.