கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வாக்கிங் சென்ற இளம்பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடந்துள்ளது.
வெளியான சிசிடிவி காட்சிகள்: அங்கு, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நடந்த அனைத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து செல்கிறார். அப்போது, பின்னிருந்து வந்த மர்ம நபர் ஒருவர், பெண்ணை மடக்கி பிடித்து தவறாக நடந்து கொண்டுள்ளார்.
மர்ம நபரின் பிடியில் இருந்து தப்ப அந்த பெண் முயற்சி செய்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதியில், பிடியில் இந்த பெண் தப்பியுள்ளார். உடனேயே, அந்த நபரும் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெங்களூரு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு விரிவாக பேசுகையில், "ராஜஸ்தானை சேர்ந்த அந்த பெண் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அவர் தன் தோழி ஒருவருக்காகக் காத்திருந்தபோது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன? தாக்குதல் நடத்திய நபர் வெள்ளை சட்டை மற்றும் பேன்ட் அணிந்திருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார். உடனே அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அந்த நபருக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 76, 78 மற்றும் 79 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் லோகேஷ் ஜகல்சார் கூறுகையில், "இந்த சம்பவம் மிக தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டிய பகுதிகளில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.