கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பெங்களூர் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கர்நாடகாவை வாட்டும் வறட்சி:


இந்த நிலையில், தண்ணீரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. தனியார் தண்ணீர் டேங்கர்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் பேசுகையில், "தனியார் டேங்கர்கள், போர்வெல்கள் மற்றும் பாசன கிணறுகளை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.


இந்த நெருக்கடியை சீராக்க, நான் முயற்சி செய்து வருகிறேன். அனைவருக்கும் சம அளவில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம். இதை பயன்படுத்தி மக்களை சுரண்ட அனுமதிக்க மாட்டோம். தண்ணீரை நிலையான விலையில் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்" என்றார்.


பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாலும் தண்ணீரின் தேவை அதிகரித்திருப்பதாலும் டேங்கர் தண்ணீரின் விலை உயர்ந்துள்ளது. தண்ணீரை பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் ஆடம்பர பொருளாக மாற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.


கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு:


5,000 லிட்டர் டேங்கர் தண்ணீரின் விலை பெங்களூருவில் 500 ரூபாயாக இருந்தது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறைக்கு பிறகு, அதன் விலை  2,000 ரூபாயாக உயர்ந்தது. பெங்களூருவில் சுமார் 4,000 தனியார் டேங்கர்கள் இயங்கி வருகின்றன. 14,000 ஆழ்துளை கிணறுகளில் சுமார் 7,000 கிணறுகள் வறண்டு விட்டதால் விநியோகத்தில் 50 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பெங்களூருவாசி நவ்யா கூறுகையில், "ஒரு லோடு தண்ணீருக்கு மூன்று மடங்கு விலையை டேங்கருக்கு கொடுக்கிறோம். நாங்கள் 2,000 ரூபாய் கொடுத்தால் அவர்கள் உடனே வருகிறார்கள். 1,500 ரூபாய்க்கு பேச்சுவார்த்தை நடத்தினால், 3-4 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிரச்சனை இன்னும் மோசமாகி வருகிறது" என்றார்.


கர்நாடக தண்ணீர் டேங்கர் உரிமையாளர்களை எச்சரித்த அம்மாநில துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமார், "மார்ச் 7 ஆம் தேதிக்குள் அதிகாரிகளிடம் பதிவு செய்யாவிட்டால், டேங்கர்களை அரசாங்கம் பறிமுதல் செய்யும். பெங்களூரு நகரில் மொத்தம் உள்ள 3,500 தண்ணீர் டேங்கர்களில் 10 சதவீதம் அதாவது 219 டேங்கர்கள் மட்டுமே அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளன. காலக்கெடுவிற்கு முன் பதிவு செய்யாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்யும்" என்றார்.


இதையும் படிக்க: பா.ஜ.க. தொண்டர்களுக்கு ப்ளையிங் கிஸ்! யாத்திரையில் ராகுல் காந்தி செய்த சம்பவம் - ம.பி.யில் ருசிகரம்