வாழ்வின் நெறிமுறைகளையும், தனிமனித ஒழுக்கத்தையும் கற்பிப்பதே கல்வி நிலையங்களில் அடிப்படை சாசனமாகவே உள்ளது. ஆரம்ப காலங்களில் இது முறையாகவே செயல்படுத்தப்பட்டும் வந்தது. ஆனால், தற்போது மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அதிகாரம் செலுத்த முடியாத சூழல், பிரச்னைகளை எதிர்கொள்ள தைரியமில்லாத மாணவர்களின் மனநிலை ஆகியவை கல்வி நிலையங்களின் சூழலை முற்றிலுமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி பள்ளிக்கூடங்களுக்கே மாணவர்கள் செல்போன்களை எடுத்துச் செல்வது போன்ற, விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அப்படி பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் தான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது
பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் சோதனை:
மாணவர்கள் கட்டுப்பாடுகளை மீறி பள்ளிகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக பல பள்ளிகளிலும் புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்களின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிவதாக பெற்றோர் சிலர் பள்ளி நிர்வாகங்களிடம் புகார் அளித்த நிலையில், ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கர்நாடக அசோசியேட்டட் நிர்வாகம், பெங்களூருவில் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பைகளை சோதனையிட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நகரில் உள்ள 80% பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தியது
பைகளில் கிடந்த காண்டம், கருத்தடை மாத்திரை:
மாணவர்களின் பைகளில் செல்போன்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த ஆசிரியர்கள், அவற்றில் இருந்து கிடைத்த பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். காண்டம், கருத்தடை மாத்திரை, சிகரெட்கள், லைட்டர்கள் மற்றும் மதுபானம் ஆகியவை கிடைத்துள்ளன. சிலர் தண்ணீர் பாட்டிலில் மதுபானத்தை கலந்து வகுப்பறைக்கு கொண்டு வந்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சோதனை நடத்தியது, 8,9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் என்பது கவனிக்கத்தக்கது.
மாணவர்களின் விளக்கம்:
10ம் வகுப்பு மாணவியின் பையில் காண்டம் இருந்தது தொடர்பாக விசாரித்தபோது, பள்ளி நண்பர்கள் அல்லது டியூஷன் மையத்தில் யாரேனும் தனது பையில் போட்டு இருக்கலாம் என பதிலளித்துள்ளார். ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களே சக மாணவர்களை துன்புறுத்துவது, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, கொடுமைப்படுத்துவது மற்றும் மோசமான சைகைகள் செய்வது ஆகிய பழக்கங்கள் பள்ளிகளில் இருப்பதாகவும், 5 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட மோசமான செயல்களில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பு:
மாணவர்களின் பைகளில் கிடைத்த பொருளால் அதிர்ச்சியான ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளனர். குறிப்பிட்ட மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்குமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொண்டனர். குறிப்பிட்ட மாணவர்களுக்கு 10 நாட்கள் வரை விடுப்பு வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
கைபிடித்தல், போதைப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் எதிர்பாலினத்துடன் அதிக சமூகமயமாக்கல் ஆகியவற்றை ஏற்படுத்தி உடல் ரீதியான தொடர்புக்கு வழிவகுக்கும் என, மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், , குழந்தைகள் உடன் பெற்றோர் தினமும் நேரத்தை செலவிடுவதன் மூலம், அவர்களை சரியான முறையில் வழிநடத்தலாம் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
தொடர்ச்சியாக பல மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தகுந்த நடவடிக்கையும், சீர்திருத்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.