பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெங்களூருவில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள்: குறிப்பாக, கர்நாடகாவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, அதன் தலைநகர் பெங்களுரூவில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பெண் ஒருவர், பைக்கில் வந்த ஒருவரால் இன்று காலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, பைக்கில் வந்த ஒருவரிடம் அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர்தான், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா, இதுகுறித்து கூறுகையில், "கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படிக்கும் அந்தப் பெண், கோரமங்களாவில் ஒரு பார்ட்டிக்கு சென்றுவிட்டு ஹெப்பகோடியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
நடந்தது என்ன? அந்த வழியாக சென்ற யாரோ ஒருவரிடம் இருந்து 'லிப்ட்' கேட்டுள்ளார். அப்போது, பாலியல் ரீதியாக அந்த நபர் தாக்கியுள்லார். பாலியல் வன்கொடுமை செய்தார். நாங்கள் வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம்.
நானும் மற்ற காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்களிடம் பேசினோம். அனைத்து தகவல்களையும் சேகரித்து ஐந்து குழுக்களை அமைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்" என்றார்.
சமீபத்தில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் அவரது காதலனே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெட்டி கொலை செய்தது மட்டும் இன்றி ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் அந்த உடலை புதைத்தாகவும் கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.