இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்று பெங்களூரு. பெங்களூருவை பொறுத்தவரையில், காரை வாங்குவதை விட அதை பார்க்கிங் செய்வது கடினமான காரியம். கடந்தாண்டு மட்டும் நகரின் காவல்துறை ஏறக்குறைய 15 லட்சம் பார்க்கிங் விதிமீறல்களை வழக்காக பதிவு செய்துள்ளது. 


பெங்களூரு போக்குவரத்து பிரச்னை:


பெங்களூரு நகரில் இந்த பிரச்னை எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறியே இது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பொறுப்பை போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு. 


மோசமாக மாறி வரும் உள்கட்டமைப்பு, குண்டும் குழியுமான சாலைகள், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி அடைந்தது ஆகியவற்றால் பெங்களூரு பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் பெங்களூருவில் மட்டும் 28 தொகுதிகள் உள்ளன.  


போக்குவரத்து நெரிசல்:


எனவே, நடைபெற உள்ள தேர்தலில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்னை முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பெங்களூருவின் சுமார் 800 சதுர கிலோமீட்டர் பகுதி நெரிசலால் சிக்கி தவித்துள்ளது.


கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரையில், ஐடி துறையின் தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் 1.3 கோடி பேர் வசிக்கின்றனர் என தரவுகள் கூறுகின்றன. 1 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் பார்க்கிங் மற்றும் சாலை உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் நெரிசல் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்னைகள் நகரத்தை பாதிக்கின்றன.


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நகர்ப்புற போக்குவரத்துத் துறையால் (DULT) நகரின் 2020 பார்க்கிங் கொள்கை 2.0 வகுக்கப்பட்டது. ஆனால், இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இதற்கான நடவடிக்கை நிச்சயமாக தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், நடக்க வேண்டிய முயற்சி நடக்கவில்லை" 


இருப்பினும், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம், பெங்களூரு டிராபிக் பிரச்னைகளை தீர்க்க மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.ஏ.சலீமை காவல்துறையின் சிறப்பு ஆணையராக (போக்குவரத்து) நியமித்தது.


முனைவர் பட்டம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி:


போக்குவரத்து மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சலீம், இது தொடர்பாக புத்தகம் ஒன்றை கூட எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த மூன்று மாதங்களாக நகரின் போக்குவரத்தை சீரமைக்க முயற்சித்து வருகிறேன். மேலும் சில சந்திப்புகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்துள்ளன" என்றார்.


ஐபிஎஸ் அதிகாரி சலீமின் வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள நிறுத்தங்களை குறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொள்கை அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் அதிகரித்திருப்பது ஆகியவற்றால் நகரின் பார்க்கிங் பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பெங்களூர்வாசிகள் தாங்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு எப்போது தீர்வு கிட்டும் என்று ஆவலுடன் உள்ளனர்.