போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெற மனைவி 3 கோடி ரூபாய் கேட்டதாகவும், தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறி பெங்களூருவில் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ், பெங்களூரூவில் மாரத்தஹள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், மனைவியை பிரிந்து தனியாக வாழ்த்து வருகிறார்.
பொய் வழக்கு போட்டாரா மனைவி?
இந்த நிலையில், அதுல், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் 24 பக்க தற்கொலை கடிதத்தை விட்டு சென்றதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
காவல்துறை கண்டெடுத்த தற்கொலை கடிதத்தில் தன்னுடைய மனைவி, அவரது குடும்பத்தினர், நீதித்துறை ஆகியவை மீது அதுல் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். "ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் வேலை செய்து சொந்தப் பணத்தை சம்பாதித்தாலும் மனைவி ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு தொகையாக 40,000 ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் மேலும் 2-4 லட்சம் ரூபாய் கேட்கிறார்" என தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "என் (அதுல்) மீதும், எனது குடும்பத்தினருக்கு எதிராகவும் கொலை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியது உள்பட பல பிரிவுகளின் கீழ் எனது மனைவி வழக்கு பதிவு செய்தார்.
ஐடி ஊழியரின் தற்கொலை கடிதத்தில் ஷாக்:
நான் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், இது அவரது தந்தைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் என் மீது குற்றம் சாட்டினார். இது பாலிவுட் படத்தில் வரும் கதை போல் உள்ளது.
குறுக்கு விசாரணையில் தனது தந்தை நீண்டகால நோயினால் அவதிப்பட்டு வருவதாக அவரே ஒப்புக்கொண்டார். அவளது தந்தை கடந்த 10 வருடங்களாக இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சில மாதங்களே உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் சொன்னதால்தான், விரைவில் திருமணம் செய்து கொண்டோம். இந்த வழக்கை முடிப்பதற்காக எனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் முதலில் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆனால் பின்னர் அதை ₹ 3 கோடியாக உயர்த்தினர்" என அதுல் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "அதுல் மீது அவரது மனைவியின் தாய், சகோதரர் மற்றும் அவரது மாமா ஆகியோர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அதுலின் சகோதரர் பிகாஸ் குமார் புகார் கூறி இருக்கிறார். வழக்குகளை முடிக்க மனைவி தரப்பில் இருந்து 3 கோடி ரூபாய் கேட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்" என்றார்.
இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட அதுல், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.