Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பதாக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கஃபே ஒன்றில் கடந்த 1ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பெங்களூரு போலீசார் எட்டு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேகிக்கப்படும் நபர்கள் வாடிக்கையாளர் போல் ஹோட்டலுக்குள் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் கருப்பு பேண்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக்கவசம் அணிந்திருந்தது சிசிடிவி கேமராவில் பதிவானது மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை அடுத்து, இந்த வழக்கு தொடர்புடையை குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது. இதில் சந்தேக்கிக்கப்படும் நபர், உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் துமக்கூரு சென்றதும் சிசிடிவில் பதிவாகி உள்ளது.
சென்னையில் குற்றவாளிகளா?
இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குண்டு வெடிப்பை நடத்திய குற்றவாளி அணிந்திருந்த தொப்பியை 2 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கழிவறையில் வீசிச் சென்றது தெரியவந்தது. இந்த தொப்பியை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த தொப்பியில் ஒட்டியிருந்த எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வாங்கப்பட்டது என்பது தெரிந்தது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில், 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், சாஷிப், தாகா ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட தொப்பில் போலீசார் தேடும் நபரின் தலைமுடி இருந்துள்ளது. அந்த தலைமுடியை போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, ”பெங்களூருவில் தமிழர்கள் தான் குண்டு வைத்தார்கள்” என்பது போல் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ஷோபாவும் மன்னிப்பு கேட்டிருந்தார். இப்படியான சூழலில் தான், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்கள் சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.