கர்நாடக பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 புகைப்படங்கள் இன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இரண்டாம் முனையம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பார்ப்பதற்கு மாளிகை போல இருப்பதால் அனைவரும் ஆச்சரியமாக உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர். பெங்களூரு விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட பிரமாண்ட திறப்பு விழா நடத்தப்படுகிறது.
டெர்மினல் 2 அல்லது T2 திறப்பு விழாவுடன், பயணிகள் கையாளும் திறன் மற்றும் செக்-இன் மற்றும் குடியேற்றத்திற்கான கவுண்டர்கள் இரட்டிப்பாகும். இது பயணிகளுக்கு பெரிதும் உதவுகிறது.
பெங்களூரு விமான நிலையத்தில் சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாவது முனையத்தின் மூலம், ஆண்டுக்கு 2.5 கோடி என்ற தற்போதைய கொள்ளளவில் இருந்து சுமார் 5 முதல் 6 கோடி பயணிகள் வரை வந்து செல்ல முடியும்.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையமானது, தோட்ட நகரமான பெங்களூருக்கு புகழ் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை அளிக்கும் வகையில் இரண்டாவது முனையம் கட்டப்பட்டுள்ளது.
10,000+ சதுர மீட்டர் பசுமை சுவர்கள், தொங்கும் தோட்டங்கள் மற்றும் வெளிப்புற தோட்டங்கள் வழியாக பயணிகள் பயணிப்பார்கள். இந்த தோட்டங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு விமான நிலையம் ஏற்கனவே வளாகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 100% பயன்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மையில் ஒரு அளவுகோலை நிறுவியுள்ளது. நிலைத்தன்மை கொள்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டு இரண்டாம் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரை நிறுவிய கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தேவனாஹலியில் உள்ள பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11ஆம் தேதி அம்மாநிலத்திற்கு வருகை தரும் போது கெம்பேகவுடாவில் மாபெரும் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் மற்றும் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.