உலகம் முழுவதும் கொரோனா வைரசால் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா, டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் என்று தொடர் பாதிப்புகளை சந்தித்து வந்த உலக நாடுகளுக்கு மிகப்பெரும் சிக்கலாக தற்போது ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த அந்த நாட்டினர் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் நேற்று கண்டறியப்பட்டது. இது இந்திய மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் இருவரையும் தீவிர மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
மேலும், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த தென்னாப்பிரிக்க நபர்களை கண்காணிக்கும் பணியைத் அந்த மாநில சுகாதாரத்துறையும், பெங்களூர் மாநகராட்சியும் தொடங்கினர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 10 தென்னாப்பிரிக்க பயணிகளை கண்டுபிடிக்க முடியாதது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது, பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 10 பயணிகளை கண்டறிய முடியவில்லை. அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் அவர்கள் அளித்த முகவரியில் தேடிப்பார்த்தபோது அங்கும் அவர்கள் யாரும் இல்லை. பயணிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்வது, மற்றவர்களை ரிஸ்கில் ஆழ்த்துவது ஆகும் என்றார்.
ஏற்கனவே ஒமிக்ரான் பீதியில் உறைந்துள்ள மக்களுக்கு, தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 10 பயணிகள் எங்கே இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாததும், அவர்கள் விமான நிலையத்தில் அளித்த முகவரியில் இல்லாமல் இருப்பதும் பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த 10 பேரையும் உடனடியாக மருத்துவ கண்காணிப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 9-ந் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளுக்கு பரவியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா இன்று அளித்துள்ள தகவலில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார். விமான நிலையங்களில் மத்திய அரசுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், மாநில அரசுகளும் நாட்டில் ஒமிக்ரான் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்