புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்திலிருந்து 9 முதல் 12-ம் வகுப்புகள், கல்லூரிகள் முழு நேரமாக செயல்படும் என்று கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி கல்வித் துறையில் அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் கொரோன பரவலை தடுக்கும் விதமாக இரு ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த செப்டம்பரில் இருந்து 9 முதல் 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. அதையடுத்து நவம்பரில் 1 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க முடிவு எடுத்தோம். மழை காரணமாக திறக்க முடியவில்லை.
தற்போது வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. அரைநாள் பள்ளிகள் இயங்கும். ஏற்கெனவே திறந்து நடைபெறும் 9 முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி வகுப்புகள் இனி 6ம் தேதி முதல் முழு நாளாக செயல்படும். அனைத்து பள்ளி வகுப்புகளும் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் நடத்தப்படும்.
தற்போது வரும் 6ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை மதிய உணவு தரப்படும். 1 முதல் 8ம் வகுப்பு வரை முழு நேரம் பள்ளிதொடங்கிய பிறகு மதிய உணவு தரப்படும். மாணவர் பேருந்துக்கு டெண்டர் விட பேசி வருகிறோம். ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளோரையும் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளோம். தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க உள்ளோம்.
புதுச்சேரி கல்வித் துறையில் காலியாக உள்ள பணிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். திறக்கும் நாளுக்கு முன்பாக பள்ளிகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு மாணவர்களை வரவேற்க தயாராகிவிடும். ஒமைக்ரான் உலகளவில் இருந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. பெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க கோரினர். ஆன்லைன் வகுப்புகளில் கவனிப்பது சிரமமாக இருந்ததாக வலியுறுத்தினர். அதனால் பள்ளிகளை திறக்கிறோம். பள்ளியில் நேரடி வகுப்புடன் ஆன்லைன் வகுப்பும் தொடரும் என்று குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்