கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரம், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதையடுத்து, சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது.


பிபிசி அலுவலங்களில் ரெய்டு:


இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீரென ஆய்வு மேற்கொண்டது. பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆய்வு மூன்று நாள்களுக்கு நீடித்தது. வருமான வரித்துறையின் ஆய்வு உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


ஆய்வு முடிந்த பிறகு விளக்கம் அளித்து பிபிசி செய்தி நிறுவனம், எந்த வித பயமும் பாரபட்சமும் இன்றி தொடர்ந்து செய்தி வெளியிடுவோம் என கூறியிருந்தது.


வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் விட்டு வெளியேறிவிட்டதாகவும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாகவும் பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பிபிசி செய்தி நிறுவனத்திற்கு ஆதரவாக வெளிப்படையான கருத்தை பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. 


பிபிசிக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் அரசு:


"ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுவான ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகள் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.  நாங்கள் பிபிசிக்கு ஆதரவாக நிற்கிறோம். நாங்கள் பிபிசிக்கு நிதியளிக்கிறோம். பிபிசி முக்கியத்துவம் வாய்ந்தது. பிபிசிக்கு ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என பிரிட்டன் அரசு தெரிவித்தது.


இந்நிலையில், இன்று தொடங்கப்பட்ட ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிபிசி ரெய்டு விவகாரம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமான பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்:


இந்தியாவில் இயங்கும் நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் சட்ட திட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் இணங்க வேண்டும் என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஜெய்சங்கர் பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம் வெளியிட்டதற்கு அரசியல் பழிவாங்கும் செயலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனம் மேற்கொண்டனர்.


கடந்த வாரம், இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்திற்கு முற்றிலமாக தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


வருமான வரித்துறை விளக்கம்:


முன்னதாக, ரெய்டு குறித்து விளக்கம் அளித்த வருமான வரித்துறை, "குழுவின் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வருமானமாக வெளிப்படுத்தப்படாத சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது. ஆய்வு நடத்தியதன் மூலம் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.


பன்னாட்டு நிறுவனத்தின் ஒரு கிளை, மற்றொரு கிளை நிறுவனத்தின் பொருட்கள், சேவைகள் மற்றும் அறிவுசார் சொத்துக்காக பணம் செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்கள் விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சிகளை பயன்படுத்தினர்" என தெரிவித்துள்ளது.