காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை கடந்த இறுதியில் காஷ்மீரில் நிறைவடைந்தது.
சாக்லெட் பாய் டூ ரக்கட் பாய்:
நடைபயணம் தொடங்கப்பட்டபோது இருந்த ராகுல் காந்தியின் தோற்றத்திற்கும் முடிந்த பிறகு இருந்த ராகுல் காந்தியின் தோற்றத்திற்கும் மிக பெரிய வேறுபாடு காணப்பட்டது. தொடக்கத்தில், சாக்லெட் பாய் போல தோற்றம் அளித்த ராகுல் காந்தி, இறுதியில் ரக்கட் பாய் போல் தோற்றம் அளித்தார். தாடியுடன் முகம் வறண்டு போய் தோற்றம் அளித்தார் ராகுல் காந்தி.
இந்நிலையில், அதில் இருந்து முற்றிலுமான வேறுபட்ட ராகுல் காந்தியின் புதிய புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளது. அதில், முழு கெட் அப்புடன் ஸ்டைலாக தோற்றம் அளிக்கிறார் ராகுல் காந்தி. இங்கிலாந்துக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார்.
ஸ்டைலான புதிய கேட் அப்:
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு பிறகு முதல்முறையாக ஹேர் கட் செய்து ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் இருக்கிறார். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளதால் கோட் சூட்டுடன் இருக்கும் ராகுல் காந்தியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஒரு வார சுற்றுப்பயணத்திற்காக நேற்று லண்டனுக்கு சென்றார் ராகுல் காந்தி.
தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். "21 ஆம் நூற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்வது" என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மட்டும் இன்றி, பிக் டேட்டா, ஜனநாயகம், இந்தியா - சீனா உறவுகள் ஆகிய விவகாரங்கள் குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ருதி கபிலாவுடன் ராகுல் காந்தி உரையாட இருக்கிறார்.
முன்னதாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருப்பது குறித்து ட்வீட் செய்திருந்த ராகுல் காந்தி, "நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்று உரையாற்ற ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
ஆர்எஸ்எஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு விழாவில், "ஜம்மு காஷ்மீரில் நான் நடந்தது போல பாஜக உறுப்பினர்களால் நடக்க முடியாது. அவர்களுக்கு பயம் உள்ளது" என்றார்.
தனது தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூர்ந்து பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களின் வலியை புரிந்துகொண்டேன் என்றார்.
இதையடுத்து பேசிய பிரியங்கா காந்தி, "இந்த ஐந்து மாத இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் மக்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலம் மற்றும் அதன் பன்முகத்தன்மையின் மீது இந்த நாட்டில் இன்னும் ஒரு பேரார்வம் உள்ளது" என்றார்.