கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.95 கோடி அளவில் மோசடி செய்ததற்காக அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பண மோசடி (Money Laundering) என்பது ஒரு வகையாக பண மோசடி. சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சம்பாதிக்கப்படும் பணத்தை நல்ல முறையில் சம்பாதித்த பணமாக காண்பிக்க மேற்கொள்ளப்படும் ஒரு சட்ட விரோதமான நடைமுறை.
போதை மருந்து கடத்தல், தீவிரவாத செயல்களுக்கான நிதியை வழங்குதல், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பணம் போன்றவை இந்த வகை பணமாகவே பெரும்பாலும் இருக்கும். அந்நியச் செலாவணி முறைகேடு, பணமோசடி ஆகிய விவகாரங்கள் ஆங்கிலத்தில் மணி லாண்டரிங் என்று அறியப்படுகிறது. தவறான வழிகளில் சம்பாதித்த பணம், லஞ்சம், வரி செலுத்தாமல் பதுக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றும் நடவடிக்கை தான் இது.
கருப்பு பணத்தை, பொருளாதார புழக்கத்திற்குள் கொண்டு வரும் இந்த நடவடிக்கை அனைத்து தளங்களிலும் நடைபெறுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. இது போன்ற பொருளாதார குற்றங்களை அலுவலக பணியில் நல்ல நிலையில் இருக்கும் அதிகாரி தொடங்கி, சாலைகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரை செய்கின்றனர். சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தை, வரி செலுத்தப்பட்ட மற்றும் நல்ல வழியில் சம்பாதித்த பணமாக காண்பித்து கொள்ள, இது போன்ற பொருளாதார குற்றங்கலில் ஈடுபடும் குற்றவாளிகள் பலவிதமான பணமோசடி நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தான் பண மோசடி தடுப்பு சட்டம், 2002 கொண்டு வரப்பட்டது. இது பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் NDA அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட விதிகள் ஜூலை 1, 2005 முதல் நடைமுறைக்கு வந்தன.
இந்த சட்டம் மற்றும் விதிகளின் படி வங்கி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்கவும், பதிவுகளை பராமரிக்கவும் மற்றும் தகவல்களை நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் நிதி புலனாய்வு பிரிவுக்கு வழங்கவும் கடமை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கவுசிக் குமார் நாத் என்ற அந்த நபர் மார்ச் 30 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். கவுசிக் குமார் நாத் பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொடுத்து ரூ.95 கோடி வரை கடன் பெற்றுள்ளார். கிரெடிட் ஃபெசிலிட்டி என்று சலுகையின் கீழ் தொழில் கடன் பெற்றுவிட்டு அதனை பணமாக எடுத்து வேறு காரணங்களுக்காக பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக மும்பை போலீஸ் க்ரைம் பிராஞ்சு வழக்குப் பதிவு செய்த நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் பின்னர் அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது. கவுசிக் குமார் நாத் தனது பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களையும் அவ்வப்போது மாற்றி வங்கியில் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.