மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பட்லாபூரில் பள்ளி குழந்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டுள்ளார். போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


குற்றவாளியான அக்சய் ஷிண்டே போலீஸ் அதிகாரியின் ரிவால்வரை பறித்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரியையும் அக்சய் ஷிண்டே  துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


பட்லாபூர் கொடூரம்: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


இதற்கிடையே, மும்பை அருகே தானேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. நர்சரி பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்த நபர், அதே பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை பள்ளி கழிவறை உள்ளே வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.


சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் குழந்தைகள் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


வீதிகளில் இறங்கிய மக்கள்: கொல்கத்தா சம்பவத்தில் நடந்தது போன்று நீதி கேட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆயிரக்கணக்கானோர் ரயில் பாதைகளை பல மணி நேரம் மறித்தனர். காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.


இந்த வழக்கை தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது மும்பை உயர் நீதிமன்றம். இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை செய்த விதத்தை கடுமையாக சாடியது. "சட்டத்தின் விதிகளை பட்லாபூர் போலீசார் பின்பற்றவில்லை.


பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை காவல் நிலையத்தில் வைத்து பெற காவல்துறை அதிகாரிகள் முயன்றனர். இது, விதிக்கு முற்றிலும் புறம்பானது. பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவைத்து வாக்குமூலம் பெற செய்ய முயற்சி செய்தது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்த்தி சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மகாராஷ்டிரா அரசு பின்னர் அமைத்தது.