நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, எம்.பிக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.


அனல் பறக்கும் கூட்டணி:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. ஆளும் பாஜக அண்மையில், தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இதனிடையே, பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய நிலையில், விரைவில் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளது.


எம்.பிக்களை சந்திக்கும் மோடி:


இந்நிலையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களை பிரதமர் மோடி இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஒடிஷா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து வரும் 10ம் தேதி கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும், பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.


”தேர்தல் வியூகம்”


இந்த சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும், எப்படி எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கருத்துகளை கேட்டு, பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது. தேர்தலுக்கான வியூகங்களை வகிப்பது குறிப்பதும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிளஸ்டர் 1 கூட்டம்:


பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மகாராஷ்டிரா சதானில் நடைபெறும் ஆலோசனையில் மேற்கு உத்தரபிரதேசம், புந்தேல்கண்ட் மற்றும் பிரிஜ் பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிளஸ்டர் 2 கூட்டம்:


மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவுடன் இரவு 7 மணிக்கு நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


10 குழுக்கள்:


இதனிடையே, நாளை தலைநகர் டெல்லியியில் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள எம்.பிக்கள் அடங்கிய 10 குழுக்கள் இடம்பெற உள்ளன. இந்த குழுக்கள் 2024 பொதுத் தேர்தலுக்கான திட்டங்களை ஆலோசிப்பதற்காகவும், ஒருங்கிணைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.