எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் இருந்து பாட்னாவுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார்.  கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜக அசுர பலத்தில் உள்ளது.


சூடுபிடிக்கும் தேசிய அரசியல்:


இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது. 


அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், வெற்றிபெற்றது. பலம் படைத்த பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது. 


இதனிடையே, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின்:


தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் இருந்து பாட்னாவுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார். அவரை வழியனுப்ப மாநில அமைச்சர்கள், திமுகவின் நிர்வாகிகள் சென்னை விமான நிலையம் சென்றனர்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. 


ஆனால், டெல்லி அவசர சட்ட விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸ் தங்களை ஆதரிக்கவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. அதேபோல, இந்த கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் கலந்து கொள்ள மாட்டார் என்றும கூறப்படுகிறது.