Navratri Festival: நவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி திருப்பதி ஏழுமலையான் கோயில் என பல்வேறு முக்கிய புண்ணிய ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நவராத்திரி விழா:


புவியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்திய மகிசாசுரன் என்ற அரக்கன் உடன், ஆதிபராசக்தி  தொடர்ந்து 9 நாட்கள் போரிட்டு 10வது நாள் வீழ்த்தி வதம் செய்ததாக நம்பப்படுகிறது. அதனை போற்றும் விதமாக நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் ஏராளமான சிலைகளை கொண்ட கொலு ஏற்பாடு செய்து 9 நாட்கள் இறைவழிபாடு செய்வது ஐதீகம். அதேபோன்று, கோயில்களிலும் இந்த நவராத்திரி விழ கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான நவராதிரி விழா இன்று தொடங்கி, வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி, திருப்பதி ஏழுமலையான் கோயில் என பல்வேறு முக்கிய புண்ணிய ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:


நவராத்திரி திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர்,  ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, 16ம் தேதி அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, 17ம் தேதி ஏகபாதமூர்த்தி, 18ம் தேதி கால்மாறிஆடியபடலம், 19ம் தேதி தபசு காட்சி, 20ம் தேதி ஊஞ்சல், 21ம் தேதி சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, 22ம் தேதி மகிஷாசுரமர்த்தினி மற்றும் 23ம் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரத்திலும்  உற்சவர் அருள்பாலிக்க உள்ளார். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஸ்ரீரங்கம் கோயில்:


திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முதல் நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 21-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.


குலசேகரன்பட்டினம் தசரா:


குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா இன்று தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சூரசம்ஹாரம் 10-ம் நாளான வருகிற 24ம் தேதி  இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 25ம் தேதி  மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 


திருப்பதி பிரம்மோற்சவம்:


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு நடப்பாண்டு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை காலை 8] மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது.