மகாராஷ்ட்ராவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்று இரவு பாந்த்ராவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


பாபா சித்திக் கொலை:


66 வயதான பாபா சித்திக் மேற்கு பாந்த்ரா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர்.  பாபா சித்திக் மீது 6 குண்டுகள் பாய்ந்துள்ளது. அவரது மகன் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் பாபா சித்திக் மீது 3 குண்டுகள் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த கொலை ஒட்டுமொத்த மகாராஷ்ட்ராவையும் அதிர்ச்சிக்கும், பரபரப்புக்கும் ஆளாக்கியுள்ள நிலையில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


லாரன்ஸ் பிஷ்னோய்:


இந்தியாவின் பிரபல நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் நடத்தியதுடன், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் பாலிவுட் திரையரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சல்மான்கானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதுடன், கொலை முயற்சி நடத்தியதாலும் இந்திய அளவில் அறியப்பட்டார்.


லாரன்ஸ் பிஷ்னோய் மீது 12க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத்தில் உள்ள சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் தொடர்ந்து வெளியில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.


போலீசார் அளித்த தகவலின்படி, பிஷ்னோயின் கும்பலில் மொத்தம் 700க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய ரவுடிகளுடன் பிஷ்னோய்க்கு தொடர்பு இருக்கிறது. பஞ்சாபின் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா, ஆப்கானைப் பூர்வீகமாக கொண்ட டெல்லியசை் சேர்ந்த ஜிம் உரிமையாளர் ஆகியோர் கொலை வழக்கிலும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


மகாராஷ்ட்ரா போலீசார் பாபா சித்திக் கொலைக்கு பிஷ்னோய் கும்பல் காரணமா? அல்லது குடிசை மறுசீரமைப்பு வழக்கில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இவர்?


31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் 1993ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள பெரோஸ்பூரில் பிறந்தவர். இவரது தந்தை ஹரியானாவில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கோல்டி ப்ரார் என்ற ரவுடியுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது முதல் பல்கலைக்கழக அரசியலிலும், குற்றச்செயலிலும் ஈடுபட்டார். பிஷ்னோய் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்றவர்.


சண்டிகரில் 2010ம் ஆண்டு முதல் கொலை முயற்சி, கொள்ளை முயற்சி, அடிதடி ஆகியவற்றில் ஈடுபட்டு குற்றச்சம்பவங்களில் போலீசாரின் குற்றவாளிகள் பட்டியலில் பெயர் பெற்றார். சிறையில் இருந்தவாறே பல்வேறு குற்றச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் பிஷ்னோய் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.


சல்மான்கான் மீது கரும்புலிகளை வேட்டையாடியதாக வழக்கு நடைபெற்று வருகிறது.  பிஷ்னோய் சமூகத்தினர் கரும்புலிகளை தெய்வமாக போற்றுகின்றனர். இந்த வழக்கிற்கு பிறகு சல்மான்கானை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது கொலைமுயற்சியும் நடத்தப்பட்டது. மேலும், பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளியான ரோகித் கோடாரா சல்மான் கானின் நெருங்கிய நண்பர்கள் எங்களது எதிரிகள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட பாபா சித்திக் சல்மான் கானின் மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.