நாடு முழுவதும் பல ஆண்டுகளாக பல எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் ஏற்படுத்திய அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோயில் திறப்பு விழாவை வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


ஆண்டுதோறும் 5 கோடி சுற்றுலா பயணிகள்:


ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது முதலே ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரையும் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அயோத்தியை வளர்ச்சியடைந்த தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலமாக இனி நாட்டிலே அதிக பக்தர்கள் வரும் மத தலமாக அயோத்தி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகழ்பெற்ற ஜெப்ரீஸ் ப்ரோக்கரேஜ் வெளியிட்ட தரவுகளின்படி அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆண்டுதோறும் 5 கோடி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மத சுற்றுலா தளங்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அயோத்தி மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பெரிய சுற்றுலா புனித தலம்:


தற்போது, நாட்டிலே அதிக சுற்றுலா பயணிகள் வரும் புனித தலங்களாக பொற்கோவில் மற்றும் திருப்பதி திகழ்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதை அயோத்தி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் உருவாக்கப்பட உள்ள புதிய விமான நிலையம், தற்போது இயங்கி வரும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் இதை சாத்தியமாக்க உதவும் என்று நம்ப்படுகிறது.


அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஆண்டுதோறும் 3 முதல் 3.5 கோடி சுற்றுலா பயணிகளும், திருப்பதிக்கு 2.5 கோடி முதல் 3 கோடி சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அயோத்தி புதிய விமான நிலையத்தின் முதற்கட்டமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது 10 லட்சம் பயணிகளை கையாள முடியும் அளவிற்கு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது 2025ம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர், இந்த விமான நிலையமானது 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


மேம்படுத்தப்படும் அயோத்தி:


அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் தற்போது 60 ஆயிரம் பயணிகளை தினமும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும், 1200 ஏக்கர் பரப்பளவில் பசுமை நகரம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தற்போது 17 ஹோட்டல்கள் 590 அறைகளுடன் இயங்கி வருகிறது. 73 புதிய ஹோட்டல்கள் கட்டப்பட உள்ளது. அதில் 40 தங்கும் விடுதிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ஹோட்டல்களும் அயோத்தியில் விரைவில் தங்களது ஹோட்டல்களை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


புத்தாண்டு பிறப்பு முதலே இந்தியாவின் பேசுபொருளாக அயோத்தி ராமர் கோயில் மாறியுள்ளது. தொடர்ந்து அயோத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் தற்போது நிலத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் இனி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அயோத்தி நகரின் பொருளாதாரம் பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!


மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!