ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்கிறேன் என்று பாலியல் வழக்கில் சிக்கி மாயமான நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை தனது ஆன்மிக பேச்சுகளால் ஈர்க்கவைத்தவர் நித்தியானந்தா. சிறுவயது முதலே எண்ணற்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி பிரபலம் ஆனவர் நித்தியானந்தா.
குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், ஆசிரமத்தில் இருந்த சிலர் வாக்குமூலம் கொடுத்த பிறகு நித்தியானந்தா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் பிடதி ஆசிரமத்திலேயே முகாமிட்டிருந்த நித்யானந்தா திடீரென மாயமானார். பாலியல் வழக்கில் சிக்கிய அவர் 2019ல் மாயமானார்.
நித்யானந்தா மீது இந்திய அரசு பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பியது. இதனை அறிந்த நித்தியானந்தா நேபாளம் வழியாக , தீவு ஒன்றிற்கு தப்பி ஓடினார். ஒருநாள் சமூகவலைதளத்தில் வந்து, தான் கைலாச என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையையும் கொடுத்தார். அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐநாவுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு உடல்நலம் கெட்டு, அவர் கோமாவுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனாலும் மீண்டு வந்து அவ்வப்போது பேசி வருகிறார்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதால், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ( ஜன.22ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள். ஒட்டுமொத்த உலகையும் காக்கும் வகையில், கடவுள் ராமர் கோயிலில் மூலவராக எழுந்தருள உள்ளார்.
இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கலந்துகொள்ள உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.