அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோயிலில் ராம் லாலா (குழந்தை வடிவிலான ராமர்) கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராமர் கோயிலில் உள்ள குழந்தை போன்ற ஸ்ரீராமர் சிலை குறித்து ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஸ்ரீ ராம்லாலாவின் சிலை, ஐந்து வயது குழந்தையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 51 அங்குல உயரமும், 1.5 டன் எடையும் கொண்ட இந்த சிலை கருங்கல்லால் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி அன்று மதியம் 12 மணிக்கு சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்கள் ஒளிரும். ஜனவரி 16-ம் தேதி முதல் சிலைக்கு வழிபாடு தொடங்கி, ஜனவரி 18-ம் தேதி கருவறையில் நிறுவப்படும். தண்ணீர், பால் கொண்டு அபிஷேகம் செய்தாலும் இந்த சிலைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.” என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “ஸ்ரீ ராமர் சிலையின் நீளம் மற்றும் அதன் நிறுவலின் உயரம் இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாத சுக்ல பக்ஷத்தின் ராம நவமியில் சூரிய பகவான் தானே வழிபடுவார். அதாவது, நண்பகல் 12 மணிக்கு சூரியனின் கதிர்கள் நேரடியாக சிலையின் நெற்றியில் விழுவதால், ஸ்ரீராமருக்கு சூரிய பகவான் நேரடியாக அபிஷேகம் செய்வார். கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த சிலைக்கு விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையும், அரச மகனின் பிரகாசமும் மட்டுமின்றி, ஐந்து வயதுக் குழந்தையின் அப்பாவித்தனமும் இருக்கிறது.
முகத்தின் மென்மை, கண்களின் பார்வை, புன்னகை, உடல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 51 அங்குல உயரம் கொண்ட சிலையின் தலை, கிரீடம் மற்றும் உடலமைப்பு ஆகியவையும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து, “ஜனவரி 16-ம் தேதி முதல் சிலை பிரதிஷ்டை தொடங்கும். ஜனவரி 18 ஆம் தேதி, கருவறையில் உள்ள சிம்மாசனத்தில் ராமர் நிறுவப்படுவார். 5 ஆண்டுகள் பழமையான இந்த ராமர் சிலை, கோவிலின் தரை தளத்தில் வைக்கப்பட்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்படும். முதல் தளத்தில் ராமரின் சகோதரர் லட்சுமனன் மற்றும் ’பக்தர்’ அனுமன் சிலைகள் வைக்கப்படும். எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்தக் கோயில் தயாராகிவிடும்.
மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷபரி மற்றும் தேவி அஹில்யா ஆகியோரின் கோயில்களும் இந்த வளாகத்தில் கட்டப்படும். இது தவிர ஜடாயுவின் சிலை ஏற்கனவே இங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கட்டிடக்கலை தென்னிந்தியாவின் கோயில்களால் ஈர்க்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பொறியாளர்களின் கூற்றுப்படி, கடந்த 300 ஆண்டுகளில் வட இந்தியாவில் இதுபோன்ற கோயில் கட்டப்படவில்லை. மேலும், கல்லின் வயது 1,000 ஆண்டுகள் என்றாலும், ஈரப்பதத்தை உறிஞ்சுவதைத் தடுக்க கீழே கிரானைட் நிறுவப்பட்டுள்ளதால், சூரிய ஒளி, காற்று மற்றும் நீர் அதைப் பாதிக்காது ” என்று தெரிவித்தார்.
மேலும், பக்தர்கள் கிழக்குத் திசையிலிருந்தும் கோயிலுக்குள் நுழைந்து, தெற்கு திசையிலிருந்து வெளியேறுவார்கள் என்றும், கோயிலின் மேற்கட்டுமானம் முழுவதும் மூன்று அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.
ராமர் கோயிலின் பிரதான வாயிலில் சமீபத்தில் யானைகள், சிங்கங்கள், அனுமன் மற்றும் கருடன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கற்களைப் பயன்படுத்தி இந்த சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ராமர் கோவில் பாரம்பரிய நாகர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் வளாகம் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.