பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில், இந்து மத குருமார்களை தவிர்த்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்துக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படாத சூழலில் இன்று முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


அயோத்தி ராமர் சிலைக்கு புது பெயர்:


இந்த நிலையில், நேற்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு புது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுவன் வடிவிலான ராமர் சிலைக்கு பாலக ராமர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


பிராண பிரதிஷ்டை செய்த அர்ச்சகர்களில் ஒருவரான அருண் தீக்சித், இதுகுறித்து கூறுகையில், "நேற்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் சிலைக்கு 'பாலக ராமர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயரிடக் காரணம், அவர் ஐந்து வயது குழந்தையைப் போல இருப்பதே. 


முதன்முதலில் அந்தச் சிலையைப் பார்த்தபோது சிலிர்த்துப் போய் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது நான் அனுபவித்த உணர்வை என்னால் விளக்க முடியாது. இதுவரை நான் செய்த பிரதிஷ்டைகளிலேயே இதுவே எனக்கு அதிக தெய்வீக உணர்வை தந்தது" என்றார். வாரணாசியை சேர்ந்த அருண் தீக்சித், இதுவரை, 50 முதல் 60 கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


ராமருக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள்:


ராமர் சிலையின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு,  மையத்தில் சூர்ய நாராயனரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. இதன் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது. அறக்கட்டளை வேதங்களின்படி, விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் இந்த ரத்தினத்தை தங்கள் இதயத்தில் அணிந்துள்ளன.


ராமர் சிலை அணிந்துள்ள மிக நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. மாணிக்கக் கற்கள் பதித்த இந்த தங்க நெக்லஸ் வெற்றியைக் குறிக்கிறது. இது வைஷ்ணவ பாரம்பரியத்தின் சின்னங்களான சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம் ஆகிய உருவங்களை கொண்டுள்ளது. சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மொத்த ஆரங்களின் (நெக்லஸ்) எடை மட்டுமே 3.7 கிலோ எடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்.