இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரும் சவாலாக மாறி வரும் சீனா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.


இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனா:


பாகிஸ்தான், இலங்கை வரிசையில் மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை சீனா பேணி வருகிறது. இது, இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், புதிய மாலத்தீவு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கியது. 


மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்ததில் இருந்து இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது வரை தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. போதாத குறைக்கு, மாலத்தீவு, சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தாகின.


இந்த நிலையில், சீன ஆய்வு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும் அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களை அரசு தரப்பு உறுதி செய்திருந்தாலும் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி செல்லும் சீன கப்பலின் பெயர் சியாங் யாங் ஹாங் 03.


இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் மர்ம கப்பல்:


தங்கள் நாட்டிற்குள் நுழைய வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்திருக்கும் சூழலில், மாலத்தீவை நோக்கி சீன ஆய்வு கப்பல் செல்வது முக்கிய புவிசார் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.  


இதுகுறித்து osint எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது பின்வருமாறு: சியாங் யாங் ஹாங் 03 என்ற சீனப் ஆய்வுக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைகிறது. மாலே நோக்கி சென்று கொண்டிருப்பதாக கப்பலில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவுக்கு பிரச்னையாக எழுந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 






ஆனால், இது வழக்கமான ஒன்றுதான் என இந்திய அரசு தரப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே, இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வு கப்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. உளவு பார்க்கும் வகையில் இந்த ஆய்வு கப்பல்களில் அதிசக்தி வாய்ந்த கருவிகள் இருப்பதாகவும் அது பல்வேறு விதமாக தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்தியாவின் தொடர் அழுத்தம் காரணமாகவே தங்கள் கடற்கரையில் நுழைய வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடந்தாண்டு டிசம்பர் மாதம் தடை விதித்தது. ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், இலங்கைக்கு செல்லவிருந்த சீன ஆய்வு கப்பல், மாலத்தீவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.